search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அடுத்தடுத்து விமான தாக்குதல்: 16 பேர் பலி
    X

    சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அடுத்தடுத்து விமான தாக்குதல்: 16 பேர் பலி

    சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட விமான தாக்குதல்களில் 16 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
    இட்லிப்:

    சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களுடன் தொடங்கிய உள்நாட்டு பிரச்சனை தீவிரமடைந்து அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே உக்கிரமான போராக மாறியது. கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள முக்கிய நகரங்களை மீட்பதற்காக சிரியா ராணுவம் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேசமயம் ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீவிரவாதிகளை அழிக்கும் அரசின் முயற்சிக்கு உதவியாக ரஷ்யா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் செத்து மடிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த இட்லிப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக விமான தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதில், பொதுமக்கள், குழந்தைகள் பலர் பலியாகி உள்ளனர்.

    இன்றும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 குழந்தைகள் உள்பட 16 பொதுமக்கள் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியா ராணுவம் அல்லது ரஷ்ய ராணுவ விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    வியாழக்கிழமை முதல் நடைபெற்றுவரும் தாக்குதல்களில் 11 பெண்கள், 9 குழந்தைகள், ஒரு மீட்பு பணியாளர் உள்பட 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×