search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவில் தமிழ் கல்வி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்: கல்வி மந்திரி உறுதி
    X

    மலேசியாவில் தமிழ் கல்வி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்: கல்வி மந்திரி உறுதி

    மலேசியாவில் தமிழ் கல்வி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று கல்வித்துறை மந்திரி டத்தோ மாட்சிர் பின் காலிட் கூறினார்.
    பினாங்:

    மலேசியாவில் தமிழ் கல்வி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று கல்வித்துறை மந்திரி டத்தோ மாட்சிர் பின் காலிட் கூறினார்.

    மலேசியாவில் தமிழ் கல்வி வகுப்பு தொடங்கியதன் 200-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கெடா நகரில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச தமிழ் ஆசிரியர்கள் மாநாடு நடந்து வருகிறது.

    இந்தியா, இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகிறார்கள். 200-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் மலேசிய கல்வி மந்திரி டத்தோ மாட்சிர் பின் காலிட் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.

    விழாவில் அவர் பேசுகையில், “உலகிலேயே தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் திகழ்கிறது. மலேசிய நாட்டு கலாசாரத்தில் ஒரு பிரிக்க இயலாத அங்கமாக தமிழ் கல்வி பள்ளிகள் விளங்குகின்றன. தமிழ் கல்வி பள்ளிகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என்று குறிப்பிட்டார்.

    பின்னர் இந்தியாவில் இருந்து சென்ற நிருபர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகளில் ஒரு மொழி கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 1957-ம் ஆண்டில் இருந்து மலேசியாவில் தமிழ் கல்வி நடைமுறையில் உள்ளது. தமிழ் கல்வி பள்ளிகள் இங்கு தொடர்ந்து செயல்படும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.

    முன்னதாக கல்வித்துறை துணை மந்திரி டத்தோ கமலநாதன் கூறியதாவது:-

    புதிதாக தமிழ் கல்வி பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மலேசிய பட்ஜெட்டில் 1½ கோடி அமெரிக்க டாலர் நிதி தமிழ் கல்வி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், புதிய பள்ளிகளை தொடங்கவும் இந்த நிதி செலவிடப்படும்.

    இந்த ஆண்டு 50 தமிழ் மழலையர் பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன. முன்பு தமிழர்கள் இங்கு தோட்டங்களில் அதிக அளவில் பணியாற்றி வந்தனர். தற்போது அவர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்.

    நகரங்களுக்கு வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். தமிழ் கல்வி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×