search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக பீதி - நூற்றுக்கணக்கான பயணிகள் அவசர வெளியேற்றம்
    X

    லண்டன் விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக பீதி - நூற்றுக்கணக்கான பயணிகள் அவசர வெளியேற்றம்

    பிரிட்டன் தலைநகரான லண்டன் நகர விமான நிலையத்தில் ரசாயன வாயு கசிந்ததாக வந்த புகார்களையடுத்து ஏற்பட்ட பீதியால் நூற்றுக்கணக்கான பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
    லண்டன்:

    லண்டன் நகரின் மையப்பகுதியில் லண்டன் சிட்டி ஏர்போர்ட் என்னும் விமான நிலையம் அமைந்துள்ளது.

    உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தபோது பலர் திடீர் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். ரசாயன கசிவால் இந்த கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் பீதியடைந்தனர்.

    அங்கிருந்த போலீசாரும், பாதுகாப்பு படையினரும் விமான நிலைய வளாகத்தில் இருந்த சுமார் 500 பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்களில் ரசாயன கசிவை கண்டுபிடித்து, தடுக்கும் அதிநவீன கருவிகளுடன் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணப் படையினர் விரைந்து வந்தனர்.

    ஒருமுறைக்கு இருமுறை விமான நிலைய வளாகம் முழுவதையும் வெகுதுல்லியமாக அவர்கள் பரிசோதித்தனர். ஆனால், சந்தேகத்துக்கிடமான எந்த ரசாயன கசிவும் இல்லை என்று தெரிவித்தனர்.

    அசாதாரணமான நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கண்ணீர்புகை சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், சுமார் மூன்று மணிநேரத்துக்கு பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

    இதனால், பயணிகளுக்கு நேர்ந்த இடையூறுக்காக வருத்தம் தெரிவிப்பதாக லண்டன் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×