search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனாதையானது பாகிஸ்தான்: சார்க் மாநாட்டை ஆப்கானிஸ்தானும் புறக்கணித்தது
    X

    அனாதையானது பாகிஸ்தான்: சார்க் மாநாட்டை ஆப்கானிஸ்தானும் புறக்கணித்தது

    இஸ்லாமாபாத் நகரில் நடக்கும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளை உள்ளடக்கிய சார்க் மாநாட்டை ஆப்கானிஸ்தானும் புறக்கணித்ததால் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் அனாதையாக நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
    காபுல்:

    இஸ்லாமாபாத் நகரில் நடக்கும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளை உள்ளடக்கிய சார்க் மாநாட்டை ஆப்கானிஸ்தானும் புறக்கணித்ததால் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் அனாதையாக நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

    சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.

    நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின்சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல், இஸ்லாமாபாத் நகரில் நடக்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என பூட்டான் நாடும் தீர்மானமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு பூட்டான் அரசின்சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

    சார்க் அமைப்பின் உறுப்புநாடு என்ற வகையில் பிராந்திய கூட்டுறவு தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால், தெற்காசிய பிராந்தியத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் தீவிரவாத அச்சுறுத்தலால் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் சார்க் மாநாடு வெற்றிகரமாக அமையாது என்பதால் இந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று தங்கள் நாடு தீர்மானித்துள்ளதாக பூட்டான் அரசின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவை தொடர்ந்து சார்க் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என வங்காளதேசமும், பூடானும் தெரிவித்துள்ள நிலையில்  பாகிஸ்தானின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானும் சார்க் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆப்கானிஸ்தான் அரசு விடுத்துள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான் மீது திணிக்கப்பட்ட தீவிரவாதத்தால் எங்கள் நாட்டில் வன்முறையும், சண்டையும் அதிகரித்துவரும் நிலையில் எங்கள் நாட்டின் அதிபரான அஷ்ரப் கானி,முப்படைகளின் தலைவராக பதவி வகித்து வருவதால் அவரது பொறுப்புகளை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.

    இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கானியால் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாட்டில் பங்கேற்க இயலாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவு ஆகிய எட்டு நாடுகளை உள்ளடக்கிய சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் பாகிஸ்தானில் நடைபெறும் 19-வது சார்க் மாநாட்டை புறக்கணிப்பதால், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய மூன்று சிறிய நாடுகளின் தலைவர்களை வைத்து பாகிஸ்தானால் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம், தீவிரவாதத்தை ஊக்குவித்துவரும் முக்கிய நாடான பாகிஸ்தான் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அனாதையாக நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
    Next Story
    ×