search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலம்பியா அரசு - போராளிகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை கையொப்பமானது
    X

    கொலம்பியா அரசு - போராளிகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை கையொப்பமானது

    உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் 'பார்க்' அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று கையொப்பமானது.
    கொலம்பியா:

    உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் 'பார்க்' அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று கையொப்பமானது.

    கொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் 'பார்க்' (FARC) அமைப்பு 1964-ம் ஆண்டிலிருந்து கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறது.

    தென்அமெரிக்காவின் வடமுனையில் உள்ள நாடான கொலம்பியா, பனாமா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. பல்வேறு பழங்குடிகளைக் கொண்ட கொலம்பியா 1499-ம் ஆண்டு ஸ்பானிய காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்து, 1886-ம் ஆண்டு சுதந்திரமடைந்தது.

    1950-களில் கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி கொலம்பியாவில் நிலவிய சர்வதிகார ஆட்சிக்கெதிராக இடையறாத போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அமைதியாக நடைபெற்ற இப்போராட்டங்கள் மீது கொலம்பிய அரசு வன்முறையை ஏவியது.

    தலைநகர் பொகோடா, வளம் கொழிக்கும் உயர்குடிகள் வாழும் நகரமாகவும் நாட்டின் ஏனைய பகுதிகள் ஏழ்மையில் வாடும் பகுதிகளாகவும் விளங்கின. இந்த ஏற்றதாழ்வு காரணமாக அரசுக்கெதிராகப் போரிடத் தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களில் ஒருபகுதியினரின் ஆதரவைப்பெற முடிந்தது.

    அதையடுத்து, கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மனுவல் மருலாண்டா விவசாயிகளை ஒன்றுதிரட்டிக் குழுக்களாக்கி இராணுவ வன்முறையை எதிர்க்கத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளை ஆதரித்ததற்காக விவசாயிகளுக்கு எதிரான வன்முறையை அரசு தொடங்கியது.

    கொக்கைன் என்னும் போதைப் பொருளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் கொக்கோ பயிர்கள் செழித்து வளரும் பிரதேசங்கள் ஃபார்க் போராளிகளின் தளப் பிரதேசங்களாகும். கொக்கோ பயிர் விற்பனை மூலம் தனது போராட்ட நிதித் தேவையை ஃபார்க் அமைப்பு நிறைவு செய்கிறது.

    உலகின் முக்கியமான போதைப்பொருள் விற்பனையாளராக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திகழ்கின்றது. இதை ஆதாரங்களுடன் தனது நூலில் விளக்கியிருக்கிறார் முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளியாகப் பணியாற்றிய வில்லியம் ப்ளும் என்பவர், சி.ஐ.ஏ.யின் போதைப்பொருள் விற்பனை ஏகபோகத்துக்கு ஃபார்க் தடையாக விளங்குவதால் கொலம்பியாவில் அரசின் ஆதரவுடனான கூலிப்படைகளை உருவாக்கி, அவர்கள் மூலமாக கொக்கைன் உற்பத்தியைச் செய்து வந்த அமெரிக்காவின் வியாபாரத்துக்கு ஃபார்க் அமைப்பு போட்டியாக உருவெடுத்தது.

    சாதாரண விவசாயிகள், நிலமற்ற பழங்குடிகள், ஒதுக்கப்பட்ட இனக்குழுவினர் எனச் சமூக அடுக்குகளில் கீழ்நிலையில் இருந்தவர்களின் ஆதரவுடன் ஃபார்க் வளர்ந்தது. பெரிய நிலங்களைக் கையகப்படுத்தியிருந்த நிலச்சுவாந்தார்கள், பெருமுதலாளிகள் ஆகியோருக்கு எதிராக ஃபார்க் அமைப்பு போராடியது. பெருமுதலாளிகளின் நிலங்களைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்குப் பங்கிட்டு தந்தனர்.

    எனவே, பெருமுதலாளிகளும் இராணுவமும் இணைந்து கூலிப்படைகளை உருவாக்கி ஃபார்க் அமைப்பிற்கு ஆதரவான சமூகங்களைக் கொடுமைப்படுத்தியதோடு நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது.

    இதனால் ஃபார்க் அமைப்புக்கு மேலும் ஆதரவு அதிகரித்து 1990-களில் இலத்தீன் அமெரிக்காவின் பலம் வாய்ந்த இயக்கமாகப் ஃபார்க் வளர்ந்தது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் கொலம்பிய இராணுவத்தினை ஃபார்க் முழுமையாகத் தோற்கடித்துவிடும் வல்லமையுள்ளதாக மாறிவிடும் என 1998-ல் அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    இதனால் கூலிப்படைகளுக்கு ஆயுதங்களை அளித்து ஃபார்க் அமைப்புடன் போரில் ஈடுபடுத்தி ஃபார்க் அமைப்பையும் அதன் ஆதரவுத் தளங்களையும் அழிக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்கா, அதில் தோல்வி கண்டது.

    இதற்கிடையில், கடந்த 2008-ம் ஆண்டுஃபார்க் இயக்கத்தின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட ராவுல் ரேயஸ் என்பவர் கொலம்பிய வான்படைத் தாக்குதலில் இறந்தார்.

    ஈக்குவடோர் நாட்டின் பகுதியில் நிகழ்ந்த சர்வதேச விதிகளை மீறிய இச்செயல் கொலம்பியா - ஈக்குவடோர் நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. கொலம்பியாவுடனான ராஜாங்க உறவுகளை ஈக்குவடோர் முறித்தது.

    அதேஆண்டு ஃபார்க் நிறுவனர்களில் ஒருவரும் தலைவருமான மனுவல் மருலாண்டா மாரடைப்பால் இறந்தார். அதையடுத்து ஃபார்க்  அமைப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2010-ம் ஆண்டில் மட்டும் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி 1,800 இராணுவ வீரர்களைக் கொன்று தனது பலத்தை நிறுவியது.

    இலத்தீன் அமெரிக்காவின் நான்காவது பெரிய பொருளாதாரமான கொலம்பியா, அந்தீஸ் மலைத் தொடர்கள், அமேசன் மழைக் காடுகள், வெப்ப மண்டலப் புல்வெளிகள், கரீபியன் தீவுகள், பசுபிக் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்ட புவியியல் பல்வகைமை மிக்க நாடாகும். ஃபார்க் அமைப்பின் 52 வருடகால வரலாற்றில் பலமுறை கொலம்பிய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

    நீண்டகாலமாக ஃபார்க் போராளிகளுக்கு ஆதரவாயிருந்த வெனிசுவேலாவும். பேச்சுக்களின் மூலமும் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்ததுடன், குறிப்பாக, முன்னாள் அதிபர் ஹியுகோ சாவேஸ் ஆட்சியின் போது, கொலம்பியாவின் இரு தரப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவந்திருந்தது.  

    முதலாவதாக சமாதான பேச்சுவார்த்தைக்கு முழுஆதரவு வழங்கி ஃபார்க் போராளிகளிடம் நம்பிக்கையை உருவாக்கிய நாடு கியூபாவாகும். பலசுற்றுப் பேச்சுக்கள் கியூபாவிலேயே நடைபெற்றன. 2012-ம் ஆண்டு கொலம்பிய அரசுக்கும் ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் பல தடைகளைத் தாண்டி சமாதான உடன்படிக்கையை எட்டியது.      
     
    இதையடுத்து, உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் 'பார்க்' அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று கையொப்பமானது.

    கொலம்பியா நாட்டின் அதிபர் ஜுவான் மானுவேல் சான்ட்டோஸ் மற்றும் கொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் 'பார்க்' (FARC) அமைப்பின் தலைவரான டிமோபியன் ‘டிமோசென்க்கோ ஜிமெனெஸ் ஆகியோர் கொலம்பியாவின் கர்டகேனா நகரில் இந்த  சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

    துப்பாக்கி தோட்டாக்களை உருக்கி உருவாக்கப்பட்ட பேனாக்களை பயன்படுத்தி இருதலைவர்களும் கையொப்பமிட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், கியூபா நாட்டின் அதிபர் ரவூல் கேஸ்ட்ரோ, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, வாடிகன் வெளியுறவுத்துறை செயலாளர் பியட்ரோ பரோலின் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்பட சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.

    கடந்த அரை நூற்றாண்டாக கொலம்பியாவில் இருதரப்பினருக்கும் இடையில் நீடித்த மோதலில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் அரை லட்சம் பேர் மாயமானதாகவும் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படும் நிலையில் இன்று ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, இத்தனை ஆண்டுகாலமாக போராட்டக்குழுவாக இருந்த ஃபார்க் அமைப்பு இனி அரசியல் கட்சியாக புதிய பரிணாமம் எடுத்து, அந்நாட்டின் முக்கிய தேர்தல்களில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×