search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு
    X

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 8-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.

    இதுபற்றி அவர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முற்றிலும் தகுதி இல்லாத நபர். ரஷியா, சீனா தொடங்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள்வரையில் அமெரிக்கா சந்தித்து வருகிற சிக்கலான பிரச்சினைகள் பற்றி அவர் ஏதும் அறியாதவர். அவர் எதையும் கற்றுத் தெரிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டவில்லை” என சாடினர்.

    மேலும், “வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை டிரம்ப் புரிந்துகொள்ளவில்லை. மாறாக அவமதிக்கிறார்” என குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஹிலாரியை பற்றி அவர்கள் குறிப்பிடும்போது, “வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்த அனுபவத்தால், அமெரிக்கா நலன்களை அறிந்திருக்கிறார். கள நிலவரங்களை உணர்ந்திருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளைப்பற்றி தெரிந்திருக்கிறார்” என கூறி உள்ளனர்.

    இந்த அறிக்கையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய தாமஸ் பிக்கரிங், நான்சி பவல் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
    Next Story
    ×