search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 20 மாதம் சிறை
    X

    சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 20 மாதம் சிறை

    சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கல் விவகாரத்தில் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கபாலிஸ்வரன் (வயது 65). இவர் கணக்கில் காட்டாத கருப்பு பணம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 960 சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.1 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரம்) சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்து இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கு இணையதளத்தின் மூலம் லில்லியன் என்ற பெண் அறிமுகமானார். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத போதிலும் இணையதளத்தில் அவர்களுக்கு நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ள கபாலிஸ்வரன் பலமுறை கேட்டபோதும் லில்லியன் அதற்கு மறுத்துவிட்டார்.

    அப்போது லில்லியன் தனக்கு பணம் தேவை படுவதாகவும் எனவே தனது வங்கிகணக்கில் குறிப்பிட்ட பணத்தை போட வேண்டும் எனவும் கபாலிஸ்வரனிடம் கேட்டு உள்ளார். அதன்படி கபாலிஸ்வரன் சுவிஸ் வங்கியில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம்) சிங்கப்பூரில் உள்ள தனது வங்கி கணக்குக்கு மாற்றி பின்னர் அதனை லில்லியன் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்தார். இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனையின் மூலம் கபாலிஸ்வரன் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுங்கி வைத்திருந்த விவகாரம் வெளிவந்தது. இது தொடர்பாக கபாலிஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கருப்பு பணம் பதுக்கல் விவகாரத்தில் கபாலிஸ்வரனுக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

    கபாலிஸ்வரனுக்கு இணையதளம் மூலம் பழக்கமான லில்லியன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது வங்கி கணக்குக்கு மாற்றப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரம் சிங்கப்பூர் டாலரும் கைப்பற்றப்படவில்லை.
    Next Story
    ×