search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நட்புறவு 2016: கூட்டுப் போர் பயிற்சிக்காக ரஷியா துருப்புகள் பாகிஸ்தான் வருகை
    X

    நட்புறவு 2016: கூட்டுப் போர் பயிற்சிக்காக ரஷியா துருப்புகள் பாகிஸ்தான் வருகை

    ’நட்புறவு 2016’ என்ற பெயரில் பாகிஸ்தான் - ரஷியா ராணுவத்தினர் முதன்முதலாக ஈடுபடும் கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக ரஷியாவில் இருந்து ராணுவ வீரர்கள் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் அதிரடி ரெய்டில் சுட்டுக்கொன்றைதையடுத்து, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    மேலும், பாகிஸ்தானுக்கு F-16 ரக போர் விமானங்களை அளிக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டௌ போட்டதையடுத்து, அமெரிக்கா மீது பாகிஸ்தானுக்கு மனக்கசப்பு அதிகரித்தது. இதையடுத்து, ஜோர்டான் நாட்டிடம் இருந்து போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் தீர்மானித்தது.

    இதற்கிடையே, கடந்த 15 மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் தளபதிகள் பலமுறை ரஷியாவுக்கு சென்றனர். பாகிஸ்தானுக்கு நவீனரக MI-35 ரக ஹெலிகாப்டர்களை விற்க ரஷியா சம்மதித்தது.

    இதுதொடர்பாக, கடந்த ஆண்டு இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தம் அமெரிக்கா மீதான பாகிஸ்தானின் கோபத்தையும், ரஷியாவின் மீதான புதிய காதலையும் உலகறிய செய்தது. அடுத்தகட்டமாக ரஷியாவிடம் இருந்து அதிநவீன போர் விமானங்களை வாங்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையில், ’நட்புறவு 2016’ என்ற பெயரில் பாகிஸ்தான் - ரஷியா ராணுவத்தினர் முதன்முதலாக ஈடுபடும் கூட்டுப் போர் பயிற்சியை தங்கள் நாட்டில் நடத்த பாகிஸ்தான் விரும்பியது. இதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு ராணுவ தளபதிகளும் கையொப்பமிட்டனர்.

    இந்த போர் பயிற்சியில் பங்கேற்க ரஷியாவில் இருந்து 200 துருப்புகளை சேர்ந்த ராணுவ தரைப்படை வீரர்கள் பாகிஸ்தான் வந்துள்ளனர்.

    ரஷியா ராணுவப் படைகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் முதன்முதலாக ஈடுபடும் இந்த கூட்டுப் போர் பயிற்சி நாளை (24-ம் தேதி) தொடங்கி அக்டோபர் மாதம் பத்தாம் தேதிவரை நடைபெறும் என பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் பாஜ்வா இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×