search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி மசூத் அசார் மீது சர்வதேச தடை விதிப்பதற்கு சீனா எதிர்ப்பு
    X

    பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி மசூத் அசார் மீது சர்வதேச தடை விதிப்பதற்கு சீனா எதிர்ப்பு

    பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி மசூத் அசாருக்கு சீனா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது. மசூத் அசார் மீது சர்வதேச தடை விதிப்பதற்கும் போதிய முகாந்திரம் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
    நியூயார்க்:

    பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தானை சேர்ந்த விசாரணைக்குழுவினர் இந்தியாவுக்கு வந்து விசாரணை நடத்திய நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையின்கீழ் செயல்படும் தீவிரவாத தடுப்பு முகமையிடம் இந்திய அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    ஆனால், சில விதிமுறைகள் காரணமாக அவனது பெயரை தடைசெய்யப்பட்ட சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் தற்போது இணைக்க இயலாது என ஐக்கிய நாடுகள் சபை முட்டுக்கட்டை போட்டு, இந்தியாவின் கோரிக்கையை முடக்கி வைத்துள்ளது.  இந்த அறிவிப்புக்கு இந்திய அரசின் சார்பில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஐ.நா.-விற்கான சீனாவின் நிரந்தர தூதர் லியு ஜிய்யி கூறுகையில் “சர்வதேச தடைவிதிப்பதற்கு முன்பாக அதற்கான விதிகளையும், நடைமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டியது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இருக்கும் உறுப்பு நாடுகளின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

    ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனாவின் இந்த கருத்து மூலம், மசூத் அசார் மீது சர்வதேச தடை விதிப்பதற்கு அந்நாடு முட்டுக்கட்டை போட்டுள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

    Next Story
    ×