search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல்.
    • 1200 பேரை கொன்று குவித்ததுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜானாமா செய்யாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.
    • வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் மறுத்தேர்தல்.

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களுக்கான உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், இம்ரான் கான் கட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தது. இதன்தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    அதனடிப்படையில் 21 பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களின் உறுப்பினர் இடங்களுக்கு நேற்று மறுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.-என்), பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாம் ஆதரவு பெற்ற சன்னி இட்டேஹாத் கவுன்சில் (எஸ்ஐசி), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

    தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் தனியார் மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

    அதனடிப்படையில் நவாஸ் ஷெரீப் கட்சி இரண்டு தேசிய உறுப்பினர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சி, சன்னி இட்டேஹாத் கவுன்சில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்ற ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார்.

    மாகாணங்களுக்கான உறுப்பினரில் 16 இடங்களில் 10 இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி பெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் மக்கள் கட்சி, எஸ்ஐசி, இஸ்டெகாம் பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பலுசிஸ்தான் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்றவர்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

    இடைத்தேர்தலின்போது ஆங்காங்கே சிறிய வன்முறைகள் ஏற்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் பிடிஐ கட்சி வாக்காளர்களுடன் நடைபெற்ற மோதலின்போது நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழங்கு கட்டுக்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தானில் இணையதளங்கள் முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.
    • குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பினாள் என்று அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.

    • சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.
    • இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    செம்மறி ஆடுகள் கூட்டமாக இருக்கும் போது சண்டையிட்டு காயம் அடைவது அதனை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகவே திகழ்கிறது. இதனை தடுக்க இங்கிலாந்தில் செம்மறி ஆடுகள் மீது பாடிஸ்பிரே தெளித்து விசித்திரமான தீர்வை கண்டுபிடித்துள்ளதாக சில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் நார்போக்- சபோல்க் எல்லையில் உள்ள பண்ணை விவசாயிகள் இது தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில், செம்மறி ஆடுகள் சண்டையை தடுக்க அவற்றின் மீது பாடிஸ்பிரே தெளித்தோம். இந்த சோதனை செய்து பார்த்த போது பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த நுட்பத்தை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

    • மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
    • வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    சீனாவின் தைஷான் பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை உள்ளது. 1,545 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

    இங்குள்ள கோவிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்ப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கிறார்கள். ஆனால் படியில் ஏறுவதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து சாதாரணமாக ஏற முடிவதில்லை. எனவே மலை ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    அதில் சில வீடியோக்களில், படிகள் ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகளும் உள்ளது. சில பயணிகள் பாதி படி ஏறிய நிலையில், அவர்களின் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகின. இந்த வீடியோக்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம் ஆகும். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

    • புறப்பட்ட சிறிதுநேரத்தில் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.
    • முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாங்குய்:

    மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும்.

    இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். எனவே அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் சவாரி செய்கின்றன. ஆனால் அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இந்தநிலையில் பாங்குய் நகரில் உள்ள ஒரு உள்ளூர் தலைவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாங்குய் நகரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் படகில் புறப்பட்டனர்.

    புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் என பலர் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

    இதனையறிந்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாக தங்களது மீன்பிடி படகு மூலம் மீட்க முயன்றனர். இதற்கிடையே மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர்.

    எனினும் இந்த சம்பவத்தில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 58 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜீனத் வஹீத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    • பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர் முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ராவல்பிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரே நேரத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட அழகான 6 குழந்தைகள் பிறந்தனர்.

    பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் பாதுகாப்பு கருதி தற்போது அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • 93 இடங்களில் அதிபரின் முய்சு கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
    • முக்கிய எதிர்க்கட்சியால் 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

    மாலத்தீவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 284,663 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நேற்று மாலை 5 மணி வரைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 72.96% வாக்குகள் பதிவாகின. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆண்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 867 பெண்களும் வாக்களித்திருந்தனர்.

    93 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 368 வேட்பாளர்கள் களம் கண்டனர். அதில் 130 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில் அதிபராக இருக்கும் மொய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி 90 தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களிலும் போட்டியிட்டது.

    வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மொய்சுவின் பிஎன்சி கட்சி பெரும்பலாலான இடங்களில் முன்னணி வகித்தன.

    மொய்சு தலைமையிலான பிஎன்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சூப்பர் மெஜாரிட்டியை பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் சுயேட்சையாக நின்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலில் மூன்று பெண்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். பிஎன்சி கட்சி சார்பில் மூன்று பெண்கள் களம் நிறுத்தப்பட்டனர். அந்த மூன்று பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    கடந்த 2019 தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சி 64 இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி பெற்றது. பிஎன்சி-பிபிஎம் கூட்டணி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மாலி, அட்டு, ஃபுவாஹ்முலாஹ் ஆகிய நகரங்களில் பிஎன்சி ஆதிக்கம் செலுத்தி அதிகப்படியான இடங்களை பிடித்துள்ளன.

    மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சீனாவுடன் நட்பை மேம்படுத்த விரும்புகிறார். இந்திய ராணுவம் மலேசியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.

    16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் நாய் மெட்ரோ ரெயில், படகில் ஒய்யாரமாக பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.
    • இஸ்தான்புல் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயின் அனைத்து பயணங்களையும் மைக்ரோ சிப் மூலம் பதிவு செய்தனர்.

    துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். கம்பீரமான அரண்மனை, அலங்கரிக்கப்பட்ட மர மாளிகைகள், பூங்காக்கள், படகு சவாரிகள் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்நகரத்தில் பஸ், ரெயில், மெட்ரோ ரெயிலில் தினமும் ஒரு தெரு நாய் ஒய்யாரமாக சவாரி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒரு காலத்தில் தெரு நாயாக இருந்த போஜி என்ற பெயர் கொண்ட அந்த நாய் தற்போது மெட்ரோ ரெயில்கள் மட்டுமல்லாது படகு, பஸ்சிலும் பயணம் செய்கிறது. தங்க பழுப்பு நிற ரோமங்கள், கருமையான கண்கள் மற்றும் நெகில் காதுகளுடன் அலைந்து திரியும் நாய் 'அனடோலியன் ஷெப்பர்டு' கலவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


    சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த நாய் மெட்ரோ ரெயில், படகில் ஒய்யாரமாக பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது. இஸ்தான்புல் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயின் அனைத்து பயணங்களையும் மைக்ரோ சிப் மூலம் பதிவு செய்தனர்.

    ஒரு நாளில் குறைந்தது 29 மெட்ரோ நிலையங்களில் இந்த நாய் பயணிக்கிறது என்றும், படகில் செல்லும் போதும் கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பிரபலமானதால் இந்த நாய்க்கு தனியாக ஒரு வலைதள கணக்கை உருவாக்கி உள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×