search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
    • இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.

    பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

    எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.

    ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.

    விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-

    "வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி என்றார்.

    ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.

    • புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணிப்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் தங்க நகைகள் திருடுபோனது.

    இதையடுத்து, மனைவிக்கு தந்த தங்க பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, நகைகளை திருடவில்லை என பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மன உளைச்சலில் இருந்து பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைகண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
    • ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது

    தற்போது கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

    அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது

    "ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ்தான் மாற்றியது என மோடி கூறியது அப்பட்டமான பொய் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    மோடி அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேவ கவுடா தான், 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால், அதனை காங்கிரஸ் தான் செய்தது என மோடி தெரிவித்திருக்கிறார்.

    முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த தேவகவுடா இன்னும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது நரேந்திர மோடியிடம் சரணடைந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா? என்பதை கர்நாடக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

    1995 ஆம் ஆண்டில், தேவகவுடா அரசாங்கம் கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி ஒதுக்கீட்டிற்குள் 2பி என்ற தனித்துவமான வகைப்பாட்டின் கீழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்து, முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் சேர்த்தது.

    ஆனால் பாஜக அரசின் இந்த முடிவை அமல்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மீண்டும் ஓபிசி பட்டியலில் முஸ்லிம்களை காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    • 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு கட்சிகளும் செலவு செய்வது தேர்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    மேலும், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வேலைகளை செய்யும். வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச் சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட வேலைகளை கவனிக்கும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்.

    மொத்தமாக தேர்தல் தொடர்பாக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலை மீடியா ஆய்வுகளுக்கான மையம் (The Centre for Media Studies) வெளியிட்டுள்ளது.

    லாபம் நோக்கத்தோடு செயல்படாத இந்த அமைப்பின் தலைவர் என். பாஸ்கர ராவ், இந்த தேர்தலுக்காக சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    முதலில் 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டநிலையில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக எதிர்பார்க்கப்படுகிறது என என். பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.

    96.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு வாக்காளருக்கான செலவு சுமார் ரூ.1,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது 2020 அமெரிக்க தேர்தலில் செலவிடப்பட்டதை விட அதிகமானது. அமெரிக்க தேர்தல் செலவுக்கு 1.2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. OpenSecrets.org இணைய தளம் வெளியிட்ட தகவலின்படி இவ்வளவு செலவு என தெரியவந்துள்ளது.

    பல்வேறு தளங்களை கொண்ட மீடியா மூலமாக பிரசாரம் மேற்கொள்ள 30 சதவீதம் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதி சுற்று’ படத்தை இயக்கினார்
    • சூர்யாவை நடிப்பில் ’புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதி சுற்று' படத்தை இயக்கினார் . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்த திரைப்படமாகும். ரித்திகா சிங் மிக சிறப்பான நடிப்பில் மக்கள் மனதை கவர்ந்தார். இதுவே ரித்திகா சிங் நடித்த முதல் படமாகும் .

    அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தை இயக்கினார். மிகப் பெரிய திருப்பு முனையாக சுதா கொங்கராவுக்கு அமைந்தது இத்திரைப்படம். அப்படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு 'சர்ஃபிரா' என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

    அதற்கு அடுத்து சூர்யாவை வைத்து 'புறநானூறு' படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்தாக துருவ் விக்ரமிற்கு கதையை கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. . இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது. துருவ் விக்ரம் மகான் திரைப்படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார். அத்திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரிதுள்ளார். அதீகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மத்திய மந்திரி அமித்ஷா, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பல இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சியினருக்கிடையே மோதலும் நடந்தது.

    இந்நிலையில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (26-ந்தேதி) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    வாக்காளர்கள் ஓட்டு போடுவற்காக 25,231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த 1,903 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 75 சதவீத வாக்குச்சாவடிகள் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் 144 தடையை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 144 தடை நேற்று(24-ந்தேதி) நேற்று மாலை 6 மணிக்கே அமலுக்கு வந்தது.

    அந்த மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி வரை தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கிறது.

    இந்த மாவட்டங்களில் 5 பேருக்கு மேல் கூடுதல், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
    • வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.

    தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.

    மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.

    ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.
    • டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில் பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    இந்த குறைந்த நாட்களுக்குள் (தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த டிசம்பர் மாதத்தில் இருந்து) காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டெல்லியின் ஏடிஎம் ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை. டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன. நீங்கள் வாக்களித்து பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக்கினால், அவர் ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார்.

    இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர். எல்லா இடங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானாவின் விரிவான வளர்ச்சிக்கு மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன
    • இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர்.

    கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பாஜகவினர் பிரச்சினை கிளப்பினர்.

    இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.

    பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

    மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் மனீஷ் டெல்லியில் பாஜக எம்,.பி மனோஜ் திவாரி முன்னிலையில் காஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணீஷ் காஷ்யப், "பாஜகவுடன் இணைந்து பீகாரை வலுப்படுத்துவேன். என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் பாட்னா நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி என்னை விடுதலையும் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என் மீது போடப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும், தேசியவாதத்திற்கு எதிரானவர்களுக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

    • கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
    • ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக ரேபரேலி தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். சென்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ரேபரேலி ஆகும்.

    ஆனால் இம்முறை சோனியா காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் மேல்- சபை எம்.பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வருகிற தேர்தலில் ரேபரேலியில் யார் போட்டியிட போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    நேரு குடும்பத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இத்தொகுதியில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரியங்கா முதல் முறையாக தேர்தலை நேரடியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரசேதத்தின் மற்றொரு தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் சென்ற தேர்தலில் தற்போதைய மத்திய மந்திரியான ஸ்ருமிதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருந்தபோதிலும் இம்முறை பாரதிய ஜனதாவை வீழ்த்தி வெற்றி கனியை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்க உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.

    அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் 2-ம் கட்டமாக மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

    ×