search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தர்மராஜ்
    X
    கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தர்மராஜ்

    ஆனைமலை அருகே மாணவியை சில்மி‌ஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

    ஆனைமலை அருகே பள்ளி மாணவியை சில்மி‌ஷம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    ஆனைமலை:

    ஆனைமலை அருகே உள்ள ஆழியாறில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப்பள்ளியில் இலங்கை அகதி முகாமை சேர்ந்த 9 வயது மாணவி ஒருவர் 4-ம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று பள்ளிக்கு வந்த மாணவியை தலைமை ஆசிரியர் தர்மராஜ்(52) தனியாக தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால், வேதனையடைந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை உடனடியாக வீட்டுக்கு செல்லவேண்டும் என்று தெரிவித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றார். அங்கு தனது தாயிடம் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    புகாரையடுத்து போலீசார் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்திவந்தனர். மேலும், மாணவியையும் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், தகவல் அறிந்த ஆழியாறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் அதிகமானோர் ஆழியாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து தலைமை ஆசிரியர் தர்மராஜ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். தலைமை ஆசிரியரை கைது செய்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்து கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தர்மராஜ் மேலும் பல மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்ததாகவும், ஆனால், மாணவிகள் தலைமை ஆசிரியருக்கு பயந்து வெளியில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில மாணவர்களை கழுத்தை பிடித்து தூக்கி பள்ளி வகுப்பறை சுவற்றில் தள்ளி தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது.

    தலைமை ஆசிரியர் தர்மராஜ் ஏற்கனவே வேட்டைக்காரன்புதூர் கன்னியம்மன் கோவில் அருகே உள்ள அரசு பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிபோது, அங்கு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்து, அதனால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ஆழியாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

    பின்னர் ஆழியாறு அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு இங்கு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இங்கும் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மராஜின் மனைவியும் கரியாஞ்செட்டிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியாக பணிபுரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

    தலைமை ஆசிரியர் தர்மராஜ் குறித்து ஆனைமலை வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் சின்னப்பராஜ், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மகேஷ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலமுத்துவுக்கு அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் தர்மராஜை சஸ்பெண்டு செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் தர்மராஜை டிஸ்மிஸ் செய்ய சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனருக்கும் பரிந்துரை செய்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×