search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கனால் ஏமாந்து விட்டோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கனால் ஏமாந்து விட்டோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    எல்லாவற்றிலும் வெற்றி கண்ட நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏமாந்து விட்டோம். ஹவாலா மோசடி செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் எம்.எல்.ஏ.வாகி விட்டார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    ஆட்டையாம்பட்டி:

    எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    பஸ் கட்டணம் என்ற தகவலை பரப்பி தமிழக மக்களை திசை திருப்ப தி.மு.க.வினர் முயற்சிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சி காலத்தில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 900 கோடி ரூபாயை கொடுக்கப்படாததால் தான் பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. தற்போது எரிபொருள் விலை உயர்ந்துள்ளதும் ஒரு காரணமாகும். தொழிற்சங்கத்தினரை போராட்டம் நடத்த தூண்டிவிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால், எத்தனை சதி செய்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசை கவிழ்த்து விடலாம் என காலக்கெடு விடுத்து நாள் குறித்தனர். எதுவும் நடக்கவில்லை. 11 மாதங்கள் நிறைவு அடைந்துள்ளது.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். அவரது பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அன்று வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மொபட் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி கண்ட நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏமாந்து விட்டோம். ஹவாலா மோசடி செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் எம்.எல்.ஏ.வாகி விட்டார்.

    எங்களிடம் உண்மை, சத்தியம், தியாகம், உழைப்பு இருக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாரும் அசைக்க முடியாது. அவர், 45 ஆண்டு காலம் தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்த சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மாவோடு பேசிக் கொண்டு தான் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ரவுடி ராஜ்ஜியம் நடந்து வந்தது. தி.மு.க.வினர் குறுநில மன்னர்களைப் போல் செயல்பட்டனர். மக்கள் நிம்மதி இழந்தனர். மக்கள் தங்களுடைய சொத்துக்களை காப்பாற்ற முடியவில்லை. 99 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது.

    அ.தி.மு.க. அரசு மக்களின் அரசு. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் இன்னும் 3 ஆண்டுகள் பொறுத்திருங்கள். எம்.ஜி.ஆர்.பிறந்த தின விழாவில் சவாலாக சொல்கிறேன். இன்னும் 100 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நீடிக்கும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார். #Tamilnews
    Next Story
    ×