search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சியா? பேரவையா? கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை காத்திருக்க தினகரன் முடிவு
    X

    கட்சியா? பேரவையா? கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை காத்திருக்க தினகரன் முடிவு

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருந்து அடுத்த முடிவு எடுக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி தினகரன் அணியினருக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் அந்த உற்சாகத்தை தக்கவைக்கும் அளவுக்கு சாதகமான அம்சங்கள் தற்போது இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.

    தினகரன் ஒரு வாரத்தில் கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்து ஒருவாரம் கடந்து விட்டது. ஆனாலும் அவரால் கட்சியை அறிவிக்க முடியாத நிலையில் இருக்கிறார். அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரிலேயே தொடருவதற்கு தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதியை கேட்பதற்கு அவர் முயற்சித்து வருகிறார்.

    ஆனால் இந்த வி‌ஷயத்தில் தேர்தல் கமி‌ஷன் உடனடியாக முடிவு எடுக்காது. அது நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும். எனவே அதுவரை காத்திருந்தால் தனது அணியினரை ஒருங்கிணைந்து கொண்டு செல்வது கஷ்டமான செயல்என தினகரன் எம்.எல்.ஏ. கருதுகிறார்.

    தற்போது அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் அணியினர் கொத்து கொத்தாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து செயல்படவைக்க கட்சியோ அல்லது ஒரு அமைப்போ தேவைப்படுகிறது. எனவேதான் உடனடியாக கட்சி தொடங்குவது என்ற முடிவுக்கு வந்தார்.

    ஆனால் கட்சி தொடங்கினால் 18 எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அவர்கள் தினகரனோடு இணைந்து செயல்பட முடியாது. ஏற்கனவே பதவி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வரும் என்று தினகரன் எதிர்பார்க்கிறார். சாதகமான தீர்ப்பு வந்தால் கட்சி தொடங்குவதற்கு வழிஏற்பட்டு விடும் என்றும் அவர் கருதுகிறார்.

    எனவே தீர்ப்பு வரும்வரை காத்திருந்து அடுத்த முடிவு எடுக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளதாக தினகரன் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிட்டால் அதை சந்திப்பதற்கு கண்டிப்பாக கட்சியோ அல்லது ஒரு அமைப்போ தேவைப்படுகிறது.

    எனவே பேரவை தொடங்கிவிடலாமா? என்றும் தினகரன் ஆலோசித்து வருகிறார். ஒருவாரத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்ப்பதால் ஒரு வாரத்துக்குள் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடி தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதுசம்பந்தமாக டி.டி.வி. தினகரன் ஆதரவு பதவி நீக்க எம்.எல்.ஏ. ஒருவர் கூறும்போது, ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் தினகரன் தனது முடிவை அறிவிப்பார் என்று கூறினார்.

    18 எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் தினகரன் கவனமாக இருக்கிறார். எனவே அதற்கு முன்னுரிமை கொடுத்தே எந்த முடிவையும் அவர் எடுப்பார் என்று கட்சியினர் கூறுகின்றனர்.

    இதற்கிடையே தினகரன் கட்சி தொடங்கினால் அதில் நாங்கள் சேர மாட்டோம் என்று பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். இதே மனநிலையில்தான் மற்ற பதவி பறிப்பு எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

    தற்போது தினகரன் எந்த முடிவும் எடுக்க முடியாமல், குழப்பத்தில் தவிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    Next Story
    ×