search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி - பெண்களை கவர வியூகம்
    X

    மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி - பெண்களை கவர வியூகம்

    ரஜினி மன்றத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மகளிர் மன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்களும், பதிவு செய்யப்படாமல் சுமார் 30 ஆயிரம் மன்றங்களும் உள்ளன. இந்த மன்றங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பு ஆக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்பேரில் ரஜினி மன்றம் தொடங்கப்படுவதாக ரஜினி அறிவித்தார். அந்த மன்றங்களில் உறுப்பினர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் இணைய தளம் மற்றும் செல்போன் மூலம் சேர வசதி செய்யப்பட்டது.

    இணைய தளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முதல் ஒரு வாரத்தில் 1 லட்சம் பேர் ரஜினியின் கட்சியில் இணைந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து உள்ளது. ரஜினி மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 1 கோடி வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக 10 பேர் கொண்ட குழுவை ரஜினி உருவாக்கி இருக்கிறார். அந்த குழுவினர் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ரஜினி ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    முதல் கட்டமாக ரஜினி நியமித்த குழுவினர் வேலூர் மாவட்டத்தில் கடந்த 19-ந்தேதி ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    அவர்கள் ரஜினியின் புதிய கட்சியை எப்படி வலிமையாக செயல்பட வைப்பது என்று ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகள் ரஜினிகாந்த் ஒப்புதலுடன் நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ளார்.

    அடுத்தக்கட்டமாக சென்னைக்கும் ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களிலும் ரஜினி மன்றம் முழுமையாக நிர்வாகிகளை பெறும். இதுகுறித்து ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இனி வாரம் தோறும் மாவட்ட நிர்வாகிகள் பற்றிய விவரம் வெளியாகும்” என்றார்.

    மாவட்ட நிர்வாகிகளை நியமித்த பிறகு ரஜினி ஒப்புதலுடன் கிளை, வார்டு, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்துக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்ய ரஜினி கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். இந்த மாத இறுதிக்குள் ஓரளவு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு விடுவார்கள்.

    புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் போது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ரஜினி மன்றம் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த பெண்கள் மூலம் தான் ரஜினி கட்சியின் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடியும் என்றும், ரஜினியின் முக்கிய கொள்கைகளை அடிமட்டம் வரை ஊடுருவி கொண்டு சேர்க்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மாநில, மாவட்ட அளவில் மகளிர் அணிக்கு ரஜினி கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருச்சியில் ரஜினி மன்றத்தில் “ரஜினி மக்கள் மகளிர் மன்றம்” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மகளிர் மன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு தொகுதி வாரியாகவும் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சோளிங்கரில் நேற்று சோளிங்கர் தொகுதி ரஜினி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர்.

    அந்த கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 60 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதிய நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

    ரஜினி மன்றம் சார்பில் 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு மாநில அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் மூலம் மற்ற கட்சிகளுக்கு இணையாக அனைத்து பிரிவுகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிர்வாகிகள் கூட்டம் ரஜினி தலைமையில் இன்னும் ஓரிரு மாநிலங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

    அதன் பிறகே ரஜினியின் புதிய கட்சி பெயர் வெளியாகும். தற்போது கட்சியின் சின்னமாக பாபா முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. அதை ரஜினி ரசிகர்கள் ரஜினி மன்ற மேடைகளில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    ரஜினி கட்சி பெயர், கொடி தெரிய வந்ததும் புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகளில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews

    Next Story
    ×