search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எர்ணாவூர் நாராயணன்
    X

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: எர்ணாவூர் நாராயணன்

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
    கரூர்:

    சமத்துவ மக்கள் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, கொடியேற்று விழா மற்றும் ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம். வீரா கோபாலக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு கரூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டை கடந்து விட்டது. இதில் ஓராண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி இருக்கிறார்கள். மக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.

    ரேசன் கடைகளில் பொருட்கள் இல்லை. போக்குவரத்துத்துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத்துறை சரியாக செயல்படவில்லை. ஆட்சியாளர்கள் வருவாயை எடுத்துக்கொண்டு செலவினத்தை மக்கள் தலையில் சுமத்துகிறார்கள். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உழைத்த பணத்தை கேட்டு வேலை நிறுத்தம் செய்தபோது பணம் தருகிறோம் என போராட்டத்தை நிறுத்த முடியவில்லை. மாறாக கோர்ட்டு மூலம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    தற்போது 2 மடங்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் திண்டுக்கல்லில் ஒரு அமைச்சர் பஸ் கட்டணம் ஏற்றவில்லை என்கிறார். செயல்படாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. தனியார் பஸ்களில் கட்டணம் குறைவாகவும், அரசு பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகிறார்கள்.

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதில் தமிழகம் முழுவதும் ச.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தங்க முத்து, தலைமை கழக பேச்சாளர் வில்லியம்ஸ், மாநில வர்த்தக அணி துணை பொதுச்செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×