search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் குதித்த மாணவ-மாணவிகள்
    X

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் குதித்த மாணவ-மாணவிகள்

    பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். #busfareshike #TN

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி பா.ம.க. 25-ந்தேதியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 27-ந் தேதியும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

    பஸ் கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் சாலைமறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகளும் இன்று திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கல்லூரி மாணவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியே வந்து கோ‌ஷமிட்டனர்.

    அவர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். கல்லூரியில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் சாலையில் திரண்டு மறியல் செய்தனர்.

    வந்தவாசியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் செய்தனர். செங்கம் அருகே உள்ள அன்வராபாத்பேட்டை மெயின் ரோட்டில் மாணவ-மாணவிகள் மறியல் செய்தனர். இதனால் செங்கம் போளூர் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

    திருப்பூரில் அரசு சிக்கண்ணா கலை கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் திரண்டு பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். திடீரென பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பஸ்களை சிறை பிடித்தனர். பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர்.

    மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை. பஸ் நிலையத்திற்குள்ளும் பஸ்கள் செல்ல முடியவில்லை.

    போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் 2 ஆயிரம் பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கல்லூரி முன்பு அமர்ந்து அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் கூறுகையில், “பஸ் பாஸ் கட்டணம் உயரும் என்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் கிராமப்புற மாணவிகளுக்கு சுமையை ஏற்படுத்தும்” என்றனர்.

    நாகை புத்தூர் பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு வந்து ரோட்டில் அமர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியைச் சேர்ந்த 4,500 மாணவ-மாணவிகள் இன்று காலை வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திருச்சியை அடுத்த திரு வெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்தனர்.

    பின்னர் அவர்கள் திரண்டு வந்து கல்லூரி முன்பு சாலை மறியல் செய்தனர். அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அரியலூர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி, சுரண்டை பகுதிகளில் இருந்து நெல்லையில் கல்லூரிகளில் ஏராளமானோர் படிக்கிறார்கள். இவர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்த வாட்ஸ்அப்பில் அழைப்பு விடுத்து வருகிறார்கள். “பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (22-ந்தேதி) கருப்பு ஆடை அணிந்து வரவேண்டும். யாரும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம். கல்லூரி முன் அமர்ந்து போராட்டம் நடத்தவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து நெல்லையில் உள்ள கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். வ.உ.சி மைதானத்திலும் போலீசார் குவிக்கப் பட்டனர்.

    இதற்கிடையே நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பி சென்றனர்.

    சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினார்கள். உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    பொன்னேரி பஸ்நிலையம் அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வை வாபஸ் வாங்க கோரி பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

    இந்த திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்ட கோபால் உள்பட 20 பேரை கைது செய்தனர்.

    கோவை மாவட்டம் சூலூரில் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் ஒத்தக்கடையில் அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது. பேரையூரில் மறியலில் ஈடுபட்ட 42 பேரும், ஒத்தக்கடையில் மறியலில் ஈடுபட்ட 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 2-வது பஸ் நிறுத்தம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30 பேர் கோவை-மைசூர் கோபி சந்திப்பு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோ‌ஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற‌து. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக வண்ணார் பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. #tamilnews

    Next Story
    ×