search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே திருமண நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: மணப்பெண்-உறவினர்கள் அதிர்ச்சி
    X

    திருவள்ளூர் அருகே திருமண நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: மணப்பெண்-உறவினர்கள் அதிர்ச்சி

    திருவள்ளூர் அருகே மணவாளநகரில் உள்ள திருமண மண்டபத்தில் முகூர்த்த நேரத்தில் மணமகன் மாயமான சம்பவம் மணப்பெண் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    திருவள்ளூர்:

    சென்னை எழும்பூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் சரண்குமார், என்ஜினீயர். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சரண்குமாருக்கும் திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்த பெண்ணுக்கும் இன்று (திங்கட்கிழமை) திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

    இதையொட்டி நேற்று இரவு மணவாளநகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 12.30 மணி வரை மணமக்கள் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

    இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் மணமக்களுக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்தி சென்றனர். பின்னர் மணமக்களும், அவர்களது உறவினர்களும் திருமண மண்டபத்தில் தூங்கச் சென்று விட்டனர்.

    இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருமணம் நடத்த முடிவு செய்து இருந்தனர். அதிகாலையில் மணமகள் அலங்காரத்துடன் தயாராக இருந்தார்.

    மணமகன் சரண்குமாரை தயார்படுத்துவதற்காக அவரது அறைக்கு நண்பர்கள் சென்று பார்த்தனர். அப்போது சரண்குமார் திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. ஆனால் சரண்குமார் மாயமாகி இருப்பது தெரியாமல் அவரது பெற்றோரும், உறவினர்களும் அங்கிருந்தனர்.

    மணமகன் மாயமான தகவல் பரவியதும் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளும் அவரது உறவினர்களும் செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் நின்றதால் மண்டபத்தில் இருந்த உறவினர்கள் கவலையுடன் திரும்பிச் சென்றனர். இதனால் திருமண வீடு களை இழந்து மண்டபம் வெறிச்சோடியது.

    திருமண நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்தது தொடர்பாக மணமகள் மற்றும் அவரது பெற்றோர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சரண்குமாரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து மணமகள் வீட்டார் கூறும்போது, திருமணம் நிச்சயம் நடந்ததில் இருந்து மணமகன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கல்லை. சகஜமாகவே பேசி வந்தார். நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சியில் கூட சந்தோ‌ஷமாக இருந்தார்.

    அவர் திருமணத்துக்கு மறுத்து ஓட்டம் பிடித்தது ஏன்? என்று தெரியவில்லை. இதனை அவர் திருமண ஏற்பாட்டுக்கு முன்னரே தெரிவித்து இருந்தால் எங்களுக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என்று கவலையுடன் தெரிவித்தனர். #Tamilnews
    Next Story
    ×