search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளியில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: காதலி சாலை மறியல்
    X

    போச்சம்பள்ளியில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: காதலி சாலை மறியல்

    காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தால் ஆத்திரம் அடைந்த காதலி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் பவித்ரன் (வயது 26). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டயப்படிப்பு படித்துள்ளார்.

    இவர் போச்சம்பள்ளியில் உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை மகள் மஞ்சு (25) என்பவரை காதலித்தார். இதனை தொடர்ந்து இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த வி‌ஷயம் குறித்து பவித்ரனின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதனால் மகனை அழைத்து பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். மேலும் மஞ்சுவை காதலிக்க வேண்டாம். உனக்கு வேறு இடத்தில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என கூறினர்.

    இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 15-ந்தேதி போச்சம்பள்ளி கருநடு பழனியாண்டவர் முருகன் கோவிலில் வைத்து மஞ்சுவின் பெற்றோர் சம்மதத்துடன் பவித்ரன் தனது காதலி மஞ்சுவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதற்கிடையே பவித்ரனின் பெற்றோர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர். அதன்படி இன்று காலை பவித்ரனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே போச்சம்பள்ளி வடமலபட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது.

    இதையறிந்த அவரது காதலி மஞ்சு திருமண மண்டபத்திற்கு அழுதவாறு ஓடி வந்தார். அந்த சமயத்தில் மணமகன் பவித்ரனும், மணமகளும் வீட்டிற்கு செல்வதற்காக காரில் ஏறி, திருமண மண்டபத்திற்கு வெளியே வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த மஞ்சு ஓடி சென்று அந்த காரின் முன்பகுதியில் பாய்ந்தார். ஆனால் இடித்து தள்ளி விட்டு காரில் வேகமாக சென்று விட்டனர்.

    இதையடுத்து மஞ்சு திருமணம் மண்டபத்தின் முன்பு உள்ள தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தன்னந்தனியாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அப்போது எனக்கும், பவித்திரனுக்கும் கடந்த 15-ந்தேதி ரகசிய திருமணம் நடைபெற்றது. இதை மறைத்து வேறு திருமணத்தை நடத்தி வைத்து விட்டனர். என்னையும், பவித்ரனையும் சேர்த்து வைக்க வேண்டும். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க அழுதார். இதனால் திருமணத்திற்கு வந்திருந்த இரு வீட்டார் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்து மஞ்சுவிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் மேற்கண்ட சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் வைத்து பேசி கொள்ளலாம் என்று கூறி போலீசார் மஞ்சுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    போலீசார் கூறுகையில், இந்த திருமணம் 9 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மஞ்சு வருவதை அறிந்ததும் முன்கூட்டியே அவர்கள் காலை 7 மணிக்கே திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர். முன்கூட்டியே மஞ்சு தகவல் தெரிவித்திருந்தால் நாங்கள் உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்தி இருப்போம் என்றனர். #tamilnews

    Next Story
    ×