search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தங்கல்லில் ரெயில் மறியலுக்கு முயன்ற பட்டாசு தொழிலாளர்கள் கைது
    X

    திருத்தங்கல்லில் ரெயில் மறியலுக்கு முயன்ற பட்டாசு தொழிலாளர்கள் கைது

    ரெயில் மறியலுக்கு முயன்ற பட்டாசு தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் உருவானது. இதுதொடர்பாக 152 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி:

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கதவடைப்பு போராட்டம் தொடங்கினர். கடந்த 24 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்காக விருதுநகர் மற்றும் சிவகாசியில் கஞ்சி தொட்டிகள் திறக்கப்பட்டன. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிற்சங்கம் சார்பில் இன்று திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திருத்தங்கல் ரெயில் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. நிர்வாகி பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் மறியல் போராட்டத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பங்கேற்றனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் உருவானது.

    போலீசார் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    அந்த நேரத்தில் செங்கோட்டை-மதுரை இடையேயான ரெயில் திருத்தங்கல் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலை மறிக்க போராட்ட குழுவினர் முயன்றனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 93 பெண்கள் உள்பட 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் சிவகாசியிலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் சாத்தியாபுரம் ரெயில் நிலையம் மற்றும் சிவகாசியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். #tamilnews

    Next Story
    ×