search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு அச்சகம் மூடப்பட்டது - பணி மாறுதலை எதிர்த்து தொழிலாளர்கள் வழக்கு தொடர முடிவு
    X

    மத்திய அரசு அச்சகம் மூடப்பட்டது - பணி மாறுதலை எதிர்த்து தொழிலாளர்கள் வழக்கு தொடர முடிவு

    கோவையில் இயங்கி வந்த இந்திய அரசு அச்சகம் மூடப்பட்டதால் அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பணி இட மாறுதல் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனியில் இந்திய அரசு அச்சகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இதில் 64 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் பணி மாறுதல் உத்தரவை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் உள்ள 17 அரசு அச்சகங்களை இணைத்து 5 அச்சகங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 அச்சக தொழிலாளர்கள் அந்தந்த அச்சக பகுதிலேயே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    அதேபோல கோவையில் அச்சக தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இருந்தாலும் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருந்ததால் கடந்த மாதம் 29-ந்தேதி இங்கு பணியாற்றி வந்த 64 தொழிலாளர்களையும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் அச்சகத்தில் சேர்ந்து பணியாற்ற மத்திய நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதில் முதல் கட்டமாக 32 தொழிலாளர்கள் ஜனவரி 16-ந்தேதிக்குள் நாசிக் அச்சகத்தில் பணிக்கு சேர வேண்டும் என்றும் மீதமுள்ள தொழிலாளர்கள் எந்திர வேலைகளை முடித்து கொண்டு இந்த மாத இறுதிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடந்த 13-ந் தேதி மாலையுடன் இந்த அச்சகத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஒரு சில தொழிலாளர்கள் நாசிக் அச்சகத்தில் சேர சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் விடுப்பு எடுத்து விட்டு இன்னும் செல்லாமல் உள்ளனர். மேலும் மத்திய தீர்ப்பாயத்தில் பணி இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

    இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது,

    இந்த அச்சகத்தை மூட கூடாது என்றும் எங்களுக்கு இந்த அச்சகத்திலேயே வேலை வேண்டும் என்றும் நாங்களும் பல போராட்டங்கள் செய்தோம். மத்திய அமைச்சரையும் பார்த்து பேசினோம்.

    இது தொடர்பாக மத்திய தீர்ப்பாயத்தில் பணி இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு போடப்பட்டது. ஆனால் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக ஜனவரி 16-ந் தேதி நாசிக்கில் சேர கடைசி தேதியாக இருந்தாலும், அங்கு சென்று சேர 12 நாட்கள் கால அவகாசம் உள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் நாசிக் அச்சகத்தில் பணிக்கு சேர குடும்பத்துடன் செல்ல தயாராகி வருகின்றனர்.

    கோவையை தவிர கேரளா, மைசூர், சிம்லா, சண்டிகர், கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட மற்ற 11 அரசு அச்சகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யும் வழக்கில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அவர்கள் தற்போது பணிபுரிந்த அச்சகத்திலேயே தங்களது பணிகளை தொடர்கின்றனர். ஆனால் எங்களால் மட்டும் முடியவில்லை. அதனால் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையிட செய்ய உள்ளோம் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×