search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க கூடாது: நாராயணசாமி உத்தரவு
    X

    3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க கூடாது: நாராயணசாமி உத்தரவு

    3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல். ஏ.க்களாக நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.

    மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இவர்களை நியமிக்கும். ஆனால், இந்த தடவை மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே மத்திய அரசு தன்னிச்சையாக பாரதிய ஜனத நிர்வாகிகள் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கரன் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இதற்கான உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வந்தது.

    3 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து தங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கூறினார்கள். ஆனால், அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்து விட்டார்.

    அதே நேரத்தில் அன்று இரவே கவர்னர் கிரண்பேடி 3 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தனக்கு இதற்கான அதிகாரம் இருப்பதாக அவர் கூறினார்.

    ஆனால், இந்த பதவி பிரமாணத்தையும் சபா நாயகர் ஏற்கவில்லை. இது செல்லாது என்று அவர் அறிவித்தார்.


    இதற்கிடையே 3 பேர் நியமனத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    3 பேரையும் சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க மறுத்து விட்டதால் அவர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இதுவரை அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு, அலவன்சு உள்ளிட்ட எந்த வசதிகளும் தரப்படவில்லை.

    இந்த நிலையில் புதுவை அரசு சார்பு செயலாளர் கண்ணன், சட்டசபை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளம், அலவன்சு மற் றும் தொகுதி வளர்ச்சி நிதி வழங்கும்படி கூறி இருந்தார்.

    இதை ஆய்வு செய்த சபாநாயகர் வைத்திலிங்கம் 3 பேரும் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படாததால் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று உத்தரவிட்டார்.

    மேலும் இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பித்த சார்பு செயலாளர் கண்ணன் மீது உரிமை மீறல் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன் மீது விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த 12-ந்தேதி நிதி செயலாளர் கந்தவேலு, புதுவை அரசு கருவூலதுறை டைரக்டருக்கு ஒரு உத்தரவு அனுப்பினார்.

    அதில் மத்திய அரசின் கடிதத்தின்படியும், கவர்னரின் உத்தரவுப்படியும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். இதில் கோர்ட்டு பிரச்சினை வராது என்று கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கருவூலதுறை டைரக்டருக்கு 3 எம்.எல். ஏ.க்களுக்கும் சம்பளம் வழங்க கூடாது என்று ஒரு உத்தரவு அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சபாநாயகர் உத்தரவுப்படி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க முடியாது. நிதித்துறை மந்திரியின் அனுமதி இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது.

    அதை மீறி செயல்பட்டால் சபாநாயகர் உத்தரவையும், கோர்ட்டு நடவடிக்கைகளையும் மீறிய செயலாக அமையும். கருவூலதுறைக்கு தவறான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. அது கோர்ட்டை அவமதிப்பதாக அமைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×