search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணக்குள விநாயகர் கோவிலில் முதல்-அமைச்சர் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்
    X
    மணக்குள விநாயகர் கோவிலில் முதல்-அமைச்சர் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்

    புதுவை மணக்குளவிநாயகர் கோவிலில் அன்னதான திட்டத்தை நாராயணசாமி தொடங்கி வைத்தார்

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் அன்னதான திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பக்தர்களுக்கும் உணவு பரிமாறினார்.

    புதுச்சேரி:

    புதுவை-காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    முதற்கட்டமாக,மணக்குள விநாயகர் கோவில், வேத புரீஸ்வரர் கோவில், குருசித்தானந்தா கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், காரைக்காலில் உள்ள திருநள்ளார் சனீஸ்வரன் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோவில்களில் தை முதல் தேதியில் இருந்து அன்னதான திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது,

    இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் மணக்குள விநாயகர் கோவிலில் அன்னதான திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கும் உணவு பரிமாறினார்.

    விழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. இந்து அறநிலையத் துறை செயலாளர் சுந்தர வடிவேல், ஆணையர் தில்லைவேல், கோவில் தனி அதிகாரி, அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.

    முதல் நாளில் 250 பக்தர்களுக்கு தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. இனி வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும்.

    கோவில் உச்சிகால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட பிறகு மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான டோக்கன் முன்னரே வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் மூலம், பக்தர்கள், அவர்கள் விரும்பும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற நாட்களில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ரூ.4 ஆயிரம் செலுத்தலாம்.

    அன்னதானத்தில், மதிய உணவாக வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், மோர், ஊறுகாய் மட்டுமே வழங்கப்படும்.

    கூடுதலாக ஒரு இனிப்பு, அப்பளம், வடை, பாயாசம் சேர்த்து வழங்கிட ரூ.5 ஆயிரம் நன்கொடை செலுத்திட வேண்டும்.

    பக்தர்களின் ஆதரவை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் விரிவுபடுத்தப்படும்.

    அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    சட்டசபையில் அறிவித்தப்படி, அன்னதான திட்டம், மணக்குள விநாயகர் கோவிலில் பிள்ளையார் சுழி போப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக பிறகோவில்களில் துவங்கப்படும்.

    பக்தர்கள் தரும் நன்கொடையை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் தாராளமாக இத்திட்டத்திற்கு நன்கொடை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #tamilnews



    Next Story
    ×