search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான மோகனன் - வனஜாகுமாரி
    X
    கைதான மோகனன் - வனஜாகுமாரி

    8 பெண்களை திருமணம் செய்து மோசடி: கல்யாண மன்னனுக்கு உதவிய கணவன்-மனைவி கைது

    8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னனுக்கு உதவிய கணவன்-மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமுத வள்ளி (45). கணவரை இழந்த இவர் காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமன் (55) என்பரை சந்தித்தார்.

    புருசோத்தமன் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னுடைய மனைவி இறந்து விட்டதால் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய மகளை பார்க்க ஆள் இல்லை என்பதால் மறுமணம் செய்வதாகவும் கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய குமுதவள்ளி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமனை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் புருசோத்தமன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுத வள்ளியிடம் இருந்து ரூ. 3 கோடி வாங்கினார்.

    அதன் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த குமுத வள்ளி. புருசோத்தமன் குறித்து விசாரித்த போது அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து குமுதவள்ளி போத்தனூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது புருசோத்தமன் தொழில் அதிபர் என கூறி கோவையை சேர்ந்த சபிதா, உஷாராணி, விமலா, சுசீலா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியை இந்திரா காந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா மற்றும் குமுதவள்ளி உள்பட 8 பேரை தாலி கட்டி திருமணம் செய்து அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும், அதற்கு புருசோத்தமனின் மகள் கீதாஞ்சலியும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

    இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மெட்டி ஒலி திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மோகனன் (65), அவருடைய மனைவி வனஜாகுமாரி (53) ஆகியோர் மீது மோசடிக்கு உடந்தையாக இருத்தல் உள்பட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் புருசோத்தமன் குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    புருசோத்தமன் 8 பெண்களை மட்டும் தான் ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்தாரா? அல்லது வேறு பெண்களையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது தொடர்பாகவும் கைதான தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது. #TamilNews
    Next Story
    ×