search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி வியாபாரி கொலையில் 5 வாலிபர்கள் கைது
    X

    கும்மிடிப்பூண்டி வியாபாரி கொலையில் 5 வாலிபர்கள் கைது

    கும்மிடிப்பூண்டி வியாபாரி கொலையில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரைச்சேர்ந்த வியாபாரி ஷாஜகான்(வயது27). புறநகர் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு மொத்தமாக பொருட்களை கடனில் சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வந்தார்.

    இவரிடம் கடந்த 2 வருடங்களாக கும்மிடிப்பூண்டி திருக்குளத்தைச் சேர்ந்த விமல் (21) என்பவர் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி ரெயில்களில் விற்பனை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களாக ஷாஜகானிடம் பொருட்களை வாங்காமல், வெளியே வாங்கி விமல் வியாபாராம் செய்து வந்தார்.

    விமல், தனியாக தொழில் செய்து வருவது ஷாஜகானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ரெயில் வியாபாரத்தில் நான் தான் சீனியர். என்னிடம் தான் அனைவரும் வேலை செய்ய வேண்டும். வேலைக்கு வராவிட்டால் உன்னையும், உனது குடும்பத்தையும் காலி செய்து விடுவேன் என ஷாஜகான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விமலுக்கு மிரட்டல் விடுத்தார்.

    தன்னை கொலை செய்து விடுவதாக ஷாஜகான் மிரட்டுவதாக தனது நண்பர்களான தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ் குமார், கும்மிடிப்பூண்டி விவேகானந்தர் நகரை சேர்ந்த மணிகண்டன், ம.பொ.சி. நகரை சேர்ந்த ஜெகதீசன், பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கோகுல், சிறபுழல் பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோரிடம் விமல் கூறினார். நண்பர்களுடன் சேர்ந்து ஷாஜகானை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.

    இதையடுத்து மீண்டும் வேலைக்கு வருவதாகவும், இது குறித்து பேச நேரில் பேச வரும்படியும் ஷாஜகானுக்கு விமல் அழைப்பு விடுத்தார். கடந்த 8-ம் தேதி இதற்கான சந்திப்பு கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையம் பின்புறம் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நடை பெற்றது. அங்கு விமலின் நண்பர்கள் காத்திருக்க ஷாஜகானும் வந்தார்.

    இந்நிலையில் விமல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாஜகானை வயிற்றில் குத்தினார். பின்னர் அவரது நண்பர்களும் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் ஷாஜகானின் கழுத்தை அவர்கள் அறுத்தனர். பிணமாக ரெயில் தண்டவாளத்தில் சரிந்து விழுந்த ஷாஜகானை மேம்பாலத்தின் கீழ் சிறு ஓடையில் தள்ளி விட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    மறுநாள் கொலையாளிகள் சம்பவ இடத்தை தூரத்தில் இருந்து பார்வையிட்டனர். கொலை செய்த இடத்தில் காக்கைகள் பறந்து கொண்டிருந்தன. இதனை அப்படியேவிட்டால் யாருக்காவது தெரிந்து விடும் என பயந்தனர்.

    அன்று இரவு இருட்டிய பிறகு 10 மணியளவில் கொலையாளிகள் அனைவரும் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் ஷாஜகானின் உடலை புதைத்தனர். ஆனாலும் போலீஸ் பிடியில் சிக்கி கொள்வோம் என பயந்தனர்.

    இந்த நிலையில் விமலும், அவனது நண்பர்கள் சதிஷ்குமார், மணிகண்டன், ஜெகதீசன், கோகுல் ஆகிய 5 பேர் நேற்று கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்கியம் சர்மாவிடம் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக கூறி சரண் அடைந்தனர்.

    கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.

    நேற்று மாலை கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால் முன்னிலையில் ஷாஜாகான் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஷாஜகானின் கழுத்தின் பாதி அறுக்கப்பட்டும், உடலில் முன்புறம் 17 கத்திக்குத்தும், முதுகுபுறம் 5 கத்திக் குத்துகளும் காணப்பட்டது. பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே ஷாஜாகானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள கிருஷ்ணா என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×