search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா அறையில் ரகசிய கடிதம்: ‘குட்கா’ ஊழலில் பணம் கைமாறியது எப்படி?
    X

    சசிகலா அறையில் ரகசிய கடிதம்: ‘குட்கா’ ஊழலில் பணம் கைமாறியது எப்படி?

    குட்கா ஊழல் விவகாரத்தில் சசிகலாவையும் தொடர்புபடுத்தும் வகையில் வருமான வரித்துறை அளித்துள்ள விளக்கம், தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அரசியல்வாதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு குட்கா தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து புகையிலை பொருட்களை தங்கு தடையின்றி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.

    மத்திய உளவுத்துறை இது தொடர்பாக கொடுத்த தகவலின் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். எனும் குட்கா நிறுவனத்தின் குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வருமானவரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

    மாதவராவ் வீட்டில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்றும் கிடைத்ததாக தெரிகிறது. குட்கா நிறுவனத்தின் கணக்காளரான யோகேஸ்வரி என்பவரது வீட்டிலும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

    ரகசிய டைரியை ஆய்வு செய்தபோது குட்கா, பான் மசாலாவை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கு, யார்-யாருக்கு, எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல்களை குட்கா பங்குதாரர்கள் எழுதி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். லஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை எழுதாமல், அவர்களது பதவியை சுருக்கமாக குறிப்பிட்டு அந்த ரகசிய டைரியில் எழுதி வைத்திருந்தனர்.

    இதையடுத்து குட்கா நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவை, வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர், லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் யார்-யார் என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

    ரகசிய டைரியில் எச்.எம்., சி.பி. என்று குறிப்பிட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருப்பது பற்றி மாதவராவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு மாதவராவ், எச்.எம். என்றால் “ஹெல்த் மினிஸ்டர்” (சுகாதார அமைச்சர்) சி.பி. என்றால் “கமி‌ஷனர் ஆப் போலீஸ்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

    அப்போது மாதவராவ், “2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுகாதார அமைச்சருக்கு பல கட்டங்களாக ரூ.56 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளோம். அதுபோல போலீஸ் அதிகாரிகளுக்கும், மாதம், மாதம் லஞ்சம் கொடுத்தோம். கமி‌ஷனராக இருந்த போலீஸ் அதிகாரிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்திலும் லஞ்சம் கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.

    அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு ரூ.250 கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை அவர் விற்பனை செய்து இருப்பதையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் குட்கா பங்குதாரர்களிடம் லஞ்சம் வாங்கியது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் என்பதையும், போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் என்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறை முதன்மை செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி கடிதம் அனுப்பி வைத்தார். தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கும் வருமானவரித் துறையிடம் இருந்து அது போன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கரும், போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜும் லஞ்சம் வாங்கியதை உறுதிப்படுத்தும் மாதவராவின் டைரி குறிப்புகள், மாதவராவின் வாக்குமூலமும் இணைக்கப்பட்டிருந்தன.

    அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் அந்த கடிதங்களைப் பெற்றார். ஆனால் உடனடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அனைவரது கவனமும் அந்த பக்கம் சென்று விட்டது. 2016-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா மரணம் காரணமாகவும், 2017-ம் ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு காரணமாகவும் குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதம் “குட்கா லஞ்சம்” தகவல்கள் அம்பலத்துக்கு வந்தது. டெல்லி வருமான வரித்துறையினர் உரிய ஆதாரங்களுடன் தலைமை செயலாளருக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் அனுப்பிய கடிதங்கள் மாயமாகி விட்டதாக அந்த தகவலில் குறிப்பிட்டிருந்தது. அதன் பிறகே அமைச்சரும், போலீஸ் கமி‌ஷனரும் குட்கா விற்க லஞ்சம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இதையடுத்து குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வருமான வரித் துறையின் முதன்மை செயலாளர் சுசி பாபு வர்கீஸ் பதில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ள விளக்கங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குட்கா லஞ்சம் விவகாரத்தில் சசிகலாவையும் தொடர்புபடுத்தும் வகையில் வருமான வரித்துறையின் விளக்கம் அமைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை போயஸ்கார்ட னில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந்தேதி வருமானவரித் துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சசிகலா அறையில் எங்களுக்கு பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. அதில் நாங்கள் 2016-ம் ஆண்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பிய ரகசிய கடிதமும் கிடைத்தது.

    குட்கா விற்க லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் அந்த கடிதத்தை தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பி இருந்தோம். டி.ஜி.பி. அந்த கடிதத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.

    இந்த கடிதம்தான் (நகல்) மாயமாகி விட்டதாக சொல்லப்பட்டது. சசிகலா அறையில் அந்த கடித நகல் கிடைத்துள்ளது.

    இவ்வாறு வருமானவரித்துறை முதன்மை செயலாளரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    வருமான வரித் துறையின் இந்த பதில் மூலம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வருமான வரித்துறை ரகசிய தகவலை, உரிய ஆதாரங்களுடன் கொடுத்த பிறகும் லஞ்சம் பெற்றவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? திடீரென வருமான வரியின் கடிதம் காணாமல் போய் விட்டதாக சொன்னது ஏன்? முக்கியத்துவம் வாய்ந்த அந்த கடிதம் சசிகலா அறைக்கு வந்தது எப்படி? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளதால் குட்கா லஞ்சம் விவகாரத்தில் பல உண்மைகள் மறைக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழக அரசு திட்டமிட்டு, இந்த லஞ்ச புகாரை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டதாக தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன.

    குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து வலுவான மறுப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் அமைச்சருக்கும், போலீஸ் கமி‌ஷனருக்கும் மாதம், மாதம் எப்படி லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் சென்றது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் ஒவ்வொரு மாதமும், எந்த அளவுக்கு தயாரித்து விற்பனை செய்ய அனுப்பப்படுகிறதோ, அந்த அளவுக்கு பர்சண்டேஜ் கணக்கு வைத்து லஞ்சம் கொடுத்துள்ளனர்.

    லஞ்சத்தை குட்கா பங்குதாரர்கள் நேரிடையாக எந்த அதிகாரிக்கும் கொண்டு சென்று கொடுக்கவில்லை. இதற்கென சில இடைத்தரகர் களை நியமித்திருந்தனர். அந்த இடைத்தரகர்கள் மூலம் உரியவர்களுக்கு, உரிய முறையில், உரிய பணம் போய் சேர்ந்துள்ளது.

    குட்கா பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் இந்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த வாக்கு மூலம்தான் அரசியல்வாதிகளையும் உயர் போலீஸ் அதிகாரிகளையும் குட்கா லஞ்ச வலைக்குள் கொண்டு வந்து சிக்க வைத்துள்ளது.

    எனவே ஐகோர்ட்டில் நடக்கும் இது தொடர்பான விசாரணைகள் அடுத்தடுத்து தமிழக அரசியலில் புயலை கிளப்பும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக குட்கா லஞ்சத்துக்கும் சசிகலாவுக்கும் உள்ள ரகசிய தொடர்பு வெட்ட வெளிச்சமாகும் என்கிறார்கள். அடுத்த கட்ட விசாரணை வரும் 17-ந்தேதி நடைபெற உள்ளது.  #tamilnews
    Next Story
    ×