search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆண் உடல்: ஒகி புயலில் மாயமானவரா?
    X

    குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆண் உடல்: ஒகி புயலில் மாயமானவரா?

    குளச்சலில் மீனுக்கு விரித்த வலையில் அழுகிய நிலையில் ஆண் உடல் ஒன்று சிக்கியது. அந்த உடலை மீனவர்கள் படகில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    குளச்சல்:

    ஒகி புயலில் சிக்கி குமரி மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மாயமானார்கள். அவர்களில் பலர் வெளி மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். 170-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து சோகத்தில் உள்ளனர். 

    இந்தநிலையில் கேரளாவில் கரை ஒதுங்கிய  மீனவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாமல் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் உடல்கள் டி.என்.ஏ. மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 15 குமரி மாவட்ட மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 

    இந்த நிலையில் குளச்சலில் இருந்து 11 மீனவர்கள்  விசைப்படகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை குளச்சலில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

    அப்போது அவர்கள் மீனுக்கு விரித்த வலையில் அழுகிய நிலையில் ஆண் உடல் ஒன்று சிக்கியது. அந்த உடலை மீனவர்கள் படகில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அழுகிய நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது அறிந்து குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர். பிணமாக மிதந்தவர் தங்கள் பகுதியைச் சேர்ந்தவரா? என அவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

    இதையடுத்து குளச்சல் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் சேர்ந்து அந்த நபரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலில் பிணமாக மீட்கப்பட்டவர் மீனவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் ஒகி புயலில் மாயமான மீனவரா? அல்லது புயலுக்கு பின் கடலுக்கு சென்று மாயமான 3 குளச்சல் மீனவர்களில் ஒருவரா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    Next Story
    ×