search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைக்கவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்: பி.கே.சேகர்பாபு வலியுறுத்தல்
    X

    யானைக்கவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்: பி.கே.சேகர்பாபு வலியுறுத்தல்

    யானைக்கவுனி மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசியதாவது:-

    “சென்னை யானைக் கவுனி ரெயில்வே மேம்பாலத்தில் 2016-ம் ஆண்டே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது வால்டாக்ஸ் சாலையையும், தியாகராஜர் சாலையையும் இணைக்கும் ரெயில்வே மேம்பாலமாகும்.

    இதுவரை இப்பால பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். வாகனங்களும் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. பாலத்தை இடிப்பதற்கே இப்போதுதான் டெண்டர் விட்டிருப்பதாக தெரிகிறது. எனவே பால பணியை விரைவில் முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    இதற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அளித்த பதில் வருமாறு:-

    “வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் பழுதடைந்ததால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2 சக்கர வாகனம் மட்டும் செல்ல அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முக்கியமான ரெயில்வே மேம்பாலம்.

    இதில் இருப்பு பாதைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 47 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம் 150 மீட்டர் அகலம் கொண்ட பாலமாக மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இதில் 50 சதவீத தொகையை ரெயில்வே நிர்வாகமும், 50 சதவீத நிதியை அரசும் செலவு செய்ய வேண்டும்.

    பாலப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே 2 சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என ரெயில்வே துறை அனுமதி கேட்டுள்ளது. கடந்த 21.2.2017 அன்று இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் பால பணிகள் விரைவு படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

    எனவே இந்த பால பணிகள் விரைவாக நடைபெறும். ரெயில்வே நிர்வாகமும் இதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது” என்றார்.

    Next Story
    ×