search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடியில் நிதிநிறுவன அதிபர் வெட்டி கொலை: முன்னாள் கவுன்சிலரிடம் விசாரணை
    X

    காட்பாடியில் நிதிநிறுவன அதிபர் வெட்டி கொலை: முன்னாள் கவுன்சிலரிடம் விசாரணை

    சொத்து தகராறில் நிதிநிறுவன அதிபரை வெட்டி கொலை செய்த முன்னாள் கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    காட்பாடி தாலுகா பழைய காட்பாடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 58). இவர் காட்பாடியில் நிதிநிறுவனம் வைத்து நடத்தி வந்தார். ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணியளவில் காட்பாடி தாராபடவேடு பழைய மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவர் மற்றும் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து கொண்டு வேகமாக ஸ்டாலினை நோக்கி ஓடி வந்தனர்.

    இதை கண்ட ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீண்டு, அங்கிருந்து தப்பி செல்லும் முன்பாக 2 பேரும் அவரை சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் வெட்டினர். இதில் ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.

    இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். கடை வியாபாரிகள், உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர்.

    பின்னர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அருகே உள்ள தெருவில் ரத்தக்கறை படிந்த அரிவாள் ஒன்றை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். பின்னர் ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஸ்டாலினின் மகன் சின்னராஜா (26) என்ஜினீயர். காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஸ்டாலினின் தம்பி எஸ்.ராஜா அவரது மகன் சந்தோஷ் ஆகியோர் சொத்து தகராறில் ஸ்டாலினை வெட்டிக் கொன்றுவிட்டனர் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் எஸ்.ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகாரில் கூறப்பட்டுள்ள எஸ்.ராஜா முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். அவர் தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் வேலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவராக உள்ளார்.

    காட்பாடியில் மெயின் ரோட்டில் நிதிநிறுவன அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

    இந்த கொலை சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளதா என்பதை குறித்து போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் கேமிரா பதிவு எதுவும் சிக்கவில்லை மேயின் ரோட்டில் காவல் துறை சார்பில் கேமிராக்கள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் கொலை குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க காட்பாடி சாலை முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews

    Next Story
    ×