search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் உருவெடுத்துள்ள மெகா கூட்டணி: பா.ஜ.க.வை வீழ்த்த புது வியூகம்
    X

    தமிழகத்தில் உருவெடுத்துள்ள மெகா கூட்டணி: பா.ஜ.க.வை வீழ்த்த புது வியூகம்

    பா.ஜனதாவை வீழ்த்த புது வியூகம் வகுத்துள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைமையில் 9 கட்சிகள் மெகா கூட்டணியில் இணைந்துள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு சந்திக்க உள்ள நிலையில் தமிழகத்தில் புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பிறந்தநாள் விழாவில் முரண்பாடுகளை மறந்து பல கட்சிகள் ஒன்று சேர்ந்தன.

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திராவிடர் கழகம் ஆகிய 9 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

    காங்கிரசுக்கு எதிரான கொள்கை கொண்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் காங்கிரஸ் அணியில் இணைந்து இருப்பது ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் தலைவர்களின் பேச்சும் அமைந்தது. பா.ஜனதாவை வீழ்த்த எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்போம் என்று வலியுறுத்தினார்கள்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரிடமும் 5 வகையான குணங்கள் இருந்தன. அவர்களின் அந்த குணங்கள் ஒன்றிணைந்து நின்றதால்தான் வெற்றி பெற முடிந்தது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வலிமைமிக்க பீமனாக இளங்கோவன் இருக்கிறார். அர்ஜூனராக நான் இருக்கிறேன். பன்முகத்தன்மை என்ற இந்தியாவின் மைய கருத்துக்கு மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது.

    அந்த சவாலை முறியடித்து இந்தியா எல்லா மதங்களுக்கும், எல்லா கலாச்சாரங்களுக்கும் சமமானது என்ற நிலைமையை உருவாக்குவது தான் நமது குறிக்கோள்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்த விழா இளங்கோவனின் பிறந்த நாள் விழாவாக மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்க கூடிய வகையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    திராவிடர் கழக பொது செயலாளர் கி.வீரமணி பேசும்போது, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே ஒழிக்க கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த காலத்தில் இளங்கோவன் போன்ற தலைவர்களின் போராட்டங்களும் மிக முக்கியம் என்றார்.

    ம.தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இருந்த பகை விலகிவிட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மேடையில் வைகோ பங்கேற்றார்.

    ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற பாதையை நோக்கி இந்தியாவை அழைத்து செல்ல முயற்சிக்கின்ற நிலையில் அதை எதிர்த்து ஒரு களம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி.ரங்கராஜன் பேசும் போது:-

    வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வகுப்புவாத சக்திகள் முறியடிக்கப்பட்டு முற்போக்கு சக்திகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு சில அடிப்படையான நிலைகளை காங்கிரஸ் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    ஆர்.நல்லகண்ணு பேசும்போது, மதவாத சக்திகளை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈசுவரன் ஆகியோரும், மதவாத பா.ஜனதா ஆட்சி மீண்டும் வரக்கூடாது. காங்கிரஸ் தலைமையில் மத சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    பல முரண்பாடுகள் இருந்தாலும் பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

    Next Story
    ×