search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டில் நர்சிங் மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    பேரணாம்பட்டில் நர்சிங் மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

    பேரணாம்பட்டில் காதலியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா ராஜக்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோதிபிரசாத் என்பவரது மகள் பிரீத்தா (வயது 19). ஆம்பூரில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான செல்வம் மகன் ரஞ்சித்குமார் (21) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இதையடுத்து இருவீட்டாரும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் பிரீத்தா ஈரோட்டிற்கு பயிற்சிக்கு சென்றபோது அங்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரீத்தா அந்த வாலிபருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி உள்ளார். இதனால் ரஞ்சித்குமார் போன் செய்தால் பிரீத்தா கண்டுகொள்ளவில்லை. எனவே, ரஞ்சித்குமார் கோபத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி பிரீத்தா வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு சென்ற ரஞ்சித்குமார் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், பிரீத்தாவை தாக்கி, துப்பட்டாவால் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்குமாரை கைது செய்தார்.

    இதுதொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதலாவது மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து போலீசார் பலத்த காவலுடன் ரஞ்சித்குமாரை வேலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

    Next Story
    ×