search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை: ராணிமேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு
    X

    நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை: ராணிமேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு

    ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் மெரினா கடற்கரையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாளை மறுநாள் (24-ந் தேதி) ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.

    இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் ஆரோக்கிய பிரகாசம், விமலன், விஸ்வேஸ்வரய்யா ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 இன்ஸ்பெக்டர்கள் 10 சப்- இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒரு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள இந்த அறைகள் முன்பு துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு ராணிமேரி கல்லூரி போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராணிமேரி கல்லூரியில் நேற்று இரவில் இருந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷிப்டு முறையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளை மறுநாள் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

    சென்னை மாநகராட்சி கமி‌ஷனரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமி‌ஷனர் மனோகரன் ஆகியோர் இன்று ராணிமேரி கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்தது போல ஓட்டு எண்ணும் பணியையும் செய்து முடிப்போம். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட எந்த தடையும் இல்லை. ஆர்.கே.நகரில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 19 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. அதன் பின்னர் இறுதி முடிவுகள் வெளியாகும். அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மாநகர போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
    Next Story
    ×