search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லப்பட்ட புதுமாப்பிள்ளை டார்வின் ராஜா.
    X
    கொல்லப்பட்ட புதுமாப்பிள்ளை டார்வின் ராஜா.

    குளச்சலில் புதுமாப்பிள்ளை கடத்தி கொலை: போலீசார் விசாரணை

    குளச்சலில் புதுமாப்பிள்ளை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளச்சல்:

    குளச்சலை அடுத்த புலவிளையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் குளச்சலில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் அவர் தனது மகள் அட்சயா ராஜ்லினின் கணவர் டார்வின் ராஜாவிடம் நிறுவன பொறுப்புகளை ஒப்படைத்தார். சமீபகாலமாக டார்வின் ராஜா டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    நேற்று டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற டார்வின் ராஜா மதியம் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை. எனவே அவரது மனைவி அட்சயா செல்போன் மூலம் கணவரை தொடர்பு கொண்டார். அப்போது சிறிது நேரத்தில் வீட்டுக்கு வருவதாக டார்வின் ராஜா கூறினார். அதன்பிறகு நீண்டநேரமாகியும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது மனைவி மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

    எனவே அட்சயா கணவரை தேடி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்றார். அங்குள்ளவர்கள் நீண்டநேரத்துக்கு முன்பே டார்வின்ராஜா புறப்பட்டுச் சென்றதாக கூறினர். அதிர்ச்சி அடைந்த அட்சயா பல இடங்களில் கணவரை தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டார்வின் ராஜாவை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை வெள்ளமணல் பகுதியில் உள்ள நரிக்குளத்தில் ஒரு ஆண் பிணமாக மிதப்பாக குளச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் மாயமான டார்வின் ராஜா என தெரியவந்தது. அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வந்து பிணமாக கிடந்தவர் டார்வின் ராஜா தான் என்பதை உறுதி செய்தனர். போலீசார் டார்வின் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    டார்வின் ராஜாவின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து பிணத்தை குளத்தில் வீசிச் சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    மேலும் அவர் கழுத்தில் 9 பவுன் தங்கச்சங்கிலி, 5 பவுன் கைச்செயின், மோதிரம் என மொத்தம் 15 பவுன் நகைகள் அணிந்திருந்தார். அந்த நகைகள் தற்போது மாயமாகி உள்ளன. எனவே நகையை கொள்ளையடிப்பதற்காக டார்வின் ராஜா கொல்லப்பட்டாரா? அல்லது போலீசை திசைதிருப்பும் நோக்கில் அவரது நகையை கொள்ளையடித்துச் சென்றார்களா? என்பது பற்றியும், அவரை கொன்றவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. போலீஸ் மோப்பநாய் ஓரா மற்றும் கைரேகை நிபுணர்கள் அழைத்து வரப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    கொலை செய்யப்பட்ட டார்வின் ராஜாவுக்கு கடந்த மே மாதம் தான் திருமணம் நடந்தது. திருமணமாகி 7 மாதத்துக்குள் டார்வின் ராஜா கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×