search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கருப்பு கொடி போராட்டம்
    X

    சேலம் மாவட்டத்தில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கருப்பு கொடி போராட்டம்

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மத்திய, மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் அகாடமி சார்பில் தேசிய அளவிலான ஒருவார மாநாட்டிற்கான தொடக்க விழா இன்று காலை தொடங்கியது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செய லாளர் சுனில்பாலிவால், இந்திய சமூக அறிவியல் அகாடமி தலைவர் சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். பசுமை இந்தியா திட்டம் குறித்து பெண்கள் வரைந்திருந்த கோலத்தை அவர் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் அங்குள்ள ஒரு வீட்டில் கழிவறை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ஏரிக்காடு கிராமத்துக்கு கவர்னர் செல்கிறார். அங்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளை பார்வையிடுகிறார். பனங்காட்டூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்கிறார். மீண்டும் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிக்கைக்கு வரும் கவர்னர் அங்கு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    கலெக்டர் ரோகிணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது சேலம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மாலை 4 மணி அளவில் அஸ்தம்பட்டி, கொண்டாலாம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காக்களை பார்வையிடுகிறார். பின்னர் பழைய, புதிய பஸ் நிலையம், ஜங்‌ஷன் ஆகிய இடங்களில் துப்புரவு பணியை தொடங்கி வைப்பதோடு, மக்களை சந்திக்கிறார்.

    கவர்னர் வருகையை யொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கவர்னர் சேலத்திற்கு சென்றார். அவரை கலெக்டர் ரோகிணி வரவேற்றார்.

    கவர்னர் வருகையை யொட்டி சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மா பேட்டை, பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, 3 ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் இரவோடு இரவாக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மத்திய, மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலெக்டர் அலுவலகம் அருகில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கவர்னருக்கு எதிராக பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் ஆளுநரின் அத்துமீறலை கண்டிக்கிறோம். நியாயம் அல்ல நியாயம் அல்ல ஆளூநரின் ஆய்வு நியாயம் அல்ல. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சட்டத்திற்கு தலை வணங்குங்கள், தலை வணங்குங்கள்.. என்பன போன்ற பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    அப்போது தி.மு.க. மத்திய மாவட்ட பொருளாளர் சுபாசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசுகளுக்கு என்ன? என்ன? அதிகாரங்கள் உள்ளது என்பது குறித்து அம்பேத்கர் சட்ட வரைமுறைபடுத்தி உள்ளார். அதை மீறி கவர்னர் செயல்படுகிறார். மத்திய அரசின் ஏவலாக கவர்னர் உள்ளார். அவருடைய ஆய்வு கூட்டத்தில் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தில் மட்டும் தான் கவர்னர் ஆய்வு செய்கிறார். மற்ற மாநிலங்களில் கவர்னர்கள் ஆய்வு செய்வதில்லை. அதிகாரத்தை மீறி கவர்னர் செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தை யொட்டி கலெக்டர் அலுவலகம் அருகில் காலை முதலே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் பல்வேறு இடங்களில் அனுமதி கேட்டனர். பாதுகாப்பு காரணங்கள் கருதி அனுமதி அளிக்கவில்லை. கலெக்டர் அலுவலகம் அருகில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

    Next Story
    ×