search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூர்-பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் - பயிற்சி அளிப்பதில் மும்முரம்
    X

    அலங்காநல்லூர்-பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் - பயிற்சி அளிப்பதில் மும்முரம்

    பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக மண்ணை குத்துவதும், மாதிரி வாடிவாசல் அமைத்து காளை வெளியே வருவதும் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டு விழா 400 ஆண்டுகள் பழமையானது. இந்த விழாவானது பல்வேறு தடைகளை கடந்து சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாக நேரடி கண்காணிப்பில் 2017ம் ஆண்டு நடந்தது. இந்த வருடம் ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    வருகிற ஜனவரி 15-ந் தேதி பாலமேட்டிலும், 16-ந் தேதி அலங்காநல்லூரிலும், ஜல்லிகட்டு விழா நடைபெற உள்ளது. ஜல்லிகட்டிற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து காளைகள், லாரி, வேன்கள் மூலம் வரவுள்ளது.

    வருடந்தோறும் தைமாதம் பிறப்பதற்கு முன்பாகவே காளைகளுக்கு கிராமங்களில் பயிற்சி கொடுப்பது வழக்கம். அதன்படி மாடுகளுக்கு மண்ணை குத்துவதும், மாதிரி வாடிவாசல் அமைத்து காளை வெளியே வருவதும், நீச்சல் பயிற்சி தருவதும் காளைகளுக்கு ஓட்டம் உள்ளிட்ட பல பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    அலங்காநல்லூர், பாலமேடு, வாடிபட்டி, அழகர்கோவில், நத்தம், சோழவந்தான், காஞ்சரம் பேட்டை, மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான காளைகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள் பயிற்சி வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

    காளைகளுக்கு உணவாக பருத்தி விதை, நாட்டுகோழி முட்டை, முதிர்ந்த தேங்காய் பருப்புகள், வைக்கோல், அகத்தி கீரை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து காளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் கூறியதாவது:-

    வீரத்தையும், திறமையையும் வெளிக்காட்டுவதற்கு காளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் காலம் இது. வீரர்களின் பிடியில் சிக்காமல் மைதானத்தில் சீறிப்பாயும் காளைகள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று செல்கிறது. இதையொட்டி காளைகளுக்கு பெயரும், புகழும் உயருகிறது. உயிரையும் பொருட்படுத்தால் மைதானத்தில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற தரமான பரிசுகள் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட வீரவிளையாட்டை உலக அளவில் உள்ள வெளிநாட்டினரும் வந்து கண்டுகளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×