search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலால் அரசு பொருட்காட்சி தாமதம்
    X

    ஆர்.கே.நகர் தேர்தலால் அரசு பொருட்காட்சி தாமதம்

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அரசு பொருட்காட்சி பணிகளை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் அரசு தொழில் பொருட்காட்சி டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 45 நாட்கள் வரை நடைபெறும்.

    கடந்த 2 வருடமாக வார்தா புயல், வெள்ளம் காரணமாக பொருட்காட்சி தாமதமாக தொடங்கப்பட்டது.

    ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை நாட்களில்தான் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இயற்கை சீற்றம் காரணமாக வருவாயும் குறைந்தது.

    இந்த ஆண்டு மழையின் பாதிப்பு இல்லை என்றாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் பொருட்காட்சி அரங்கு அமைக்கும் பணி தாமதமாகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொருட்காட்சி பணிகளை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளன.

    டெண்டர் விடும் பணி முடிந்து, அரங்குகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொருட்காட்சியில் இடம்பெறும் அரங்குகளில் தமிழக அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் இடம் பெறும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் அத்தகைய பணிகளை எப்படி மேற்கொள்வது என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு வேலைக்கும் தேர்தல் ஆணை த்திடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பொருட்காட்சியின் முகப்பு தோற்றம், பொழுது போக்கு அம்சங்கள், மத்திய- மாநில அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தை விதி முறைகள் 24-ந்தேதி வரை அமலில் இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகுதான் பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அரசின் திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை கவனமாக செய்ய வேண்டிய நிலை உள்ளது. அடுத்த வாரத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி விடும். இந்த மாத இறுதியில் பொருட்காட்சி தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக” தெரிவித்தார்.
    Next Story
    ×