search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட முருகனிடம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    கைது செய்யப்பட்ட முருகனிடம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

    மராட்டியத்தில் இருந்து திருட்டு கார்களை வாங்கி புதுவையில் நூதன முறையில் மாற்றி விற்பனை செய்தவர் கைது

    மராட்டியத்தில் இருந்து திருட்டு கார்களை வாங்கி புதுவையில் நூதன முறையில் மாற்றி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    மராட்டிய மாநில சீனியர் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சனுக்கு ஒரு கடிதம் வந்தது.

    அதில், மராட்டிய மாநிலத்தில் திருடப்படும் கார்கள் புதுவையை சேர்ந்த முருகன் என்பவர் மூலம் விற்பனை செய்யப்படுவதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

    அதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மராட்டிய மாநிலத்தில் இருந்து திருட்டு கார்களை வாங்கி வந்து விற்பனை செய்த முருகன் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 43) என்பது தெரிய வந்தது. நேற்று இவரை கோரிமேடு பகுதியில் அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர் மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் திருடப்பட்ட 30-க்கும் மேற்பட்ட கார்களை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுவை பகுதிகளில் விற்றுள்ளார்.

    புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் விபத்தில் சிக்கிய கார்களை உரிய ஆவணங்களுடன் வாங்கி அதனுடைய என்ஜின் நம்பர், சேஸ் நம்பர் ஆகிவற்றை அகற்றி விட்டு அதனை நூதன முறையில் திருட்டு கார்களில் பொருத்தி போலி ஆர்.சி. புத்தகம் மூலம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து முருகனை கைது செய்தது குறித்து மராட்டிய போலீசாருக்கு புதுவை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுகான் மற்றும் போலீசார் புதுவை வந்தனர். அவர்களிடம் முருகனை போலீசார் ஒப்படைத்தனர்.

    முருகனை கைது செய்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் கோரிமேடு போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.



    Next Story
    ×