search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் வாக்காளர்களை பெண்கள் மூலம் கவரும் தினகரன்
    X

    ஆர்.கே.நகர் வாக்காளர்களை பெண்கள் மூலம் கவரும் தினகரன்

    பெண்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலமே வாக்காளர்களை கவர முடியும் என்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பெண்களை பிரசாரத்துக்கு இழுக்கும் யுக்தியில் தினகரன் அணி பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. அங்கு வருகிற 19-ந்தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் பிரசாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர்கள் தொகுதியை முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை காட்டிலும் தினகரன் அணியினரே பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக பெண்கள் திரண்டுவந்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள்,  பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தினகரனுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒரு பாகம் பொறுப்பாளருக்கு 700 ஓட்டுகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

    தற்போது அ.தி.மு.க. அணிகள் இணைந்த பிறகு தினகரன் தனித்து களம் காண்கிறார் . எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் பெரும் பாலானோர் அ.தி.மு.க.வில் இருந்தாலும் முக்கிய கட்சி நிர்வாகிகள் தினகரன் பக்கமே உள்ளனர். அதிலும் கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகும்  பொறுப்பாளர்களை அவர் தன் பக்கமே தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    அந்த பொறுப்பாளர்கள் தற்போது தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலமே வாக்காளர்களை கவர முடியும் என்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பெண்களை பிரசாரத்துக்கு இழுக்கும் யுக்தியில் தினகரன் அணி பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். இந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பெண்கள் பக்கத்தில் உள்ள ஒன்றிரண்டு தெருக்களுக்கு பிரசாரத்துக்காக அழைத்துச் செல்லப் படுகிறார்கள். இப்படி ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் தினகரன் ஆதரவாளர்களாகவே மாறியுள்ளனர். பெண்கள் ஓட்டு கேட்டு வருவதால் வாக்காளர்களையும் எளிதாக கவர முடிகிறது. பிரசாரம் செய்ய ஆண்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். ஆனால் பெண்களை பொருத்தவரை ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்தவர்களே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    ஆனால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பெண்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதில் அதிக அக்கறை காட்டவில்லை. இதை தினகரன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பெண்களும் 2 மணிநேரம், 3 மணிநேரம் என்ற அளவில் பிரசாரத்துக்கு செல்கிறார்கள்.

    தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு அதற்கு மவுசு அதிகரித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கரை எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய பல கட்டுப்பாடுகள் உள்ளது. அதனால் பெண்கள் மூலம் வாக்காளர்களை கவர திட்டம் தீட்டப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க.வில் தேர்தல் பொறுப்பாளராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் பிரசாரத்தை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஆனால் தினகரனுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்டோர் தேர்தல் பொறுப்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.

    அவர்கள் அனைவருமே தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தினகரன் அணியினர் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். மேலும் சசிகலா மீது பொதுமக்களுக்கு இருந்த வெறுப்புணர்வு தினகரன் மீது இல்லை என்றே கருதப்படுகிறது. தொண்டர்கள் மீதான தினகரனின் அணுகு முறையும் அதற்கு ஒரு காரணம். இதன்மூலம் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசார வியூகத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். அது ஓட்டாக மாறுமா என்பது 24-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படும் போது தான் தெரியும்.

    Next Story
    ×