search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் தள்ளுவண்டி, மதுபார்களுக்கு 100 கிலோ இறந்த கோழிகறி கடத்தல்: 2 பேர் கைது

    திருப்பூர் வீரபாண்டி பிரிவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மூட்டையில் 100 கிலோ பதப்படுத்தப்பட்ட கோழியுடன் வந்த 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பனியன் நகரமான திருப்பூரில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    திருப்பூரில் இரவு நேரங்களில் 100 கிராம் சில்லி சிக்கன் ரூ.20 முதல் ரூ.30 வரை குறைந்த விலைக்கு தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்டது. தொழிலாளர்கள் விரும்பி சாப்பிட்டு வந்தனர்.

    குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைகளில் இறந்த கோழிகளை சுத்தம் செய்து உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இந்நிலையில் நேற்று திருப்பூர் வீரபாண்டி பிரிவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது ஒரு மூட்டையுடன் மொபட்டில் 2 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது மூட்டையில் 100 கிலோ பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி இருந்தன. விசாரணையில் கோழி இறைச்சியை கடத்தி வந்தவர் திருப்பூர் அம்மன் நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 57) என்பதும் மற்றும் கல்லாங்காடு 2-வது வீதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதில் வெள்ளிங்கிரி இறந்த கோழிகளை சேகரித்து சுத்தம் செய்பவர் என்பதும், ராதாகிருஷ்ணன் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

    இறந்த கோழிகளை சுத்தம் செய்து தள்ளுவண்டி கடைக்காரரான ராதாகிருஷ்ணனுக்கு கிலோ ரூ.50-க்கு வழக்கமாக விற்பனை செய்ய கொண்டு செல்வதாக கூறினார். இறந்த கோழி இறைச்சியை வாங்கும் ராதாகிருஷ்ணன் தள்ளுவண்டி கடையில் பிரியாணி, சிக்கன் வறுவல், சில்லிசிக்கன் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

    இது தவிர மேலும் சில தள்ளுவண்டி, மதுபார், சிறிய ஓட்டல்களுக்கும் இறந்த கோழிகளை அவர் விற்பனை செய்தது தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், அலுவலர்கள் முருகேசன், தங்கவேல் ஆகியோர் அங்கு வந்து கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறும்போது, இதுபோன்று இறந்த கோழிகளை உண்ணும்போது வயிற்றுபோக்கு, பக்கவாதம் முதல் புற்றுநோய் வரை பாதிக்க வாய்ப்புள்ளது. பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு இறந்த கோழிகளை வெளியே வீசக்கூடாது. விற்பனை செய்யக்கூடாது. குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். இதையும் மீறி சிலர் வெறும் 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பொது மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறார்கள்.

    இறந்த கோழிகளை விற்பனை செய்த பண்ணை உரிமையாளர்கள் யார் என்று கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் இதுபோன்ற சுகாதாரமாற்ற கடைகளில் அசைவ உணவு உண்ணுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களை எச்சரித்தனர்.

    கோழி இறைச்சியை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து எந்த கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை வாங்கினார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×