search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணெய் குழாய் பதிக்கும் பணியால் வீடுகளில் விரிசல்: இழப்பீடு கோரி வழக்கு
    X

    எண்ணெய் குழாய் பதிக்கும் பணியால் வீடுகளில் விரிசல்: இழப்பீடு கோரி வழக்கு

    சென்னை திருவொற்றியூர் பகுதியில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியால் வீடுகளில் ஏற்பட்ட விரிசலுக்கு பெட்ரோலிய கழகம் பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன். மீனவர் சங்க நிர்வாகியான இவர், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    சென்னை பெட்ரோலிய கழகம் சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி வரை கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

    உரிய பாதுகாப்பான முறையில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்படாததால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வீடுகளில் கீறல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன. அதேபோன்று தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலிகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதன்காரணமாக பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 5 வயது மகன் ரக்‌ஷித் பரிதாபமாக உயிரிழந்தான்.

    வீடுகளில் கீறல் ஏற்படாத வகையில் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை பெட்ரோலிய நிறுவனம் மீறி உள்ளதால் குழாய் பதிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கும், இறந்து போன சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க பெட்ரோலிய கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளதால் பெட்ரோலிய கழகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் காண்டிராக்ட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மகேசுவரன், எண்ணெய் குழாய் பதிக்கும் பணியால் ஏராளமான வீடுகள் சேதமடைந்து வருவதால் தற்போதைக்கு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய சுற்றுச்சூழல் துறை, சென்னை பெட்ரோலிய கழகம் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×