search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் உடலை பார்த்து தாய் கதறி அழுத காட்சி.
    X
    மாணவர் உடலை பார்த்து தாய் கதறி அழுத காட்சி.

    சேலம் அரசு கலைக்கல்லூரி கிணற்றில் பிணமாக கிடந்த 5-ம் வகுப்பு மாணவன்

    சேலம் அரசு கலைக்கல்லூரி கிணற்றில் பிணமாக கிடந்த 5-ம் வகுப்பு மாணவன் உடலை மீட்ட போலீசார் அவனுடன் விளையாடிய நண்பர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம், குமாரசாமிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மாதேஸ்வரி. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

    கடைசி மகன் சிபி கேசவன் (வயது 11) மரவனேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இன்று காலை சிபிகேசவன் தனது தாயார் மாதேஸ்வரியிடம், அம்மா நான், விளையாடுவதற்காக அதே பகுதியில் உள்ள நண்பர்கள் கவின் மற்றும் கவுதம் ஆகியோருடன் செல்கிறேன். சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்து விடுவேன் என கூறி விட்டு சென்றான்.

    அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு சிபி கேசவன் வரவில்லை. அவரது நண்பர்கள் கவின், கவுதம் ஆகிய இருவரும் தங்களது வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் சிபி கேசவன் மட்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் அவனது தாய் மாதேஸ்வரி மகன் எங்கே சென்றான்? என பரிதவிப்புடன் அக்கம் பக்கத்தில் எல்லாம் தேடினார். மகனுடன் விளையாட சென்ற நண்பர்களிடமும் விசாரித்தார்.

    உங்களுடன் தானே சிபிகேசவன் விளையாட வந்தான். வீட்டிற்கு இன்னும் அவன் வரவில்லையே? எங்கே சென்றான்? என விசாரித்தார். ஆனால், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது

    இந்த நிலையில் செரி ரோட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் ஒரு சிறுவன் இறந்து கிடப்பதாக அஸ்தம்பட்டி போலீசாருக்கும், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் கல்லூரி வளாகத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து சிறுவன் உடலை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.


    மாணவன் பிணமாக மிதந்த கிணறு. 

    போலீசார் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார்கள். சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து மீட்டு சிறுவன் உடலை வெளியே கொண்டு வந்து பார்த்தபோது, இந்த சிறுவன் காணாமல் போன சிபிகேசவன் என்பது தெரியவந்தது.

    இது பற்றி தகவல் அறிந்த அவருடைய தாய் மாதேஸ்வரியும் அவரது 3-வது மகன் சாரதியும் அங்கு விரைந்து வந்து சிபிகேசவன் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது தம்பி எழுந்திரு... தம்பி எழுந்திரு... அண்ணன் வந்திருக்கேன், வீட்டுக்கு போகலாம் என கையை தடவி தேம்பி, தேம்பி அண்ணன் சாரதி அழுதார்.

    தாய் மகேஸ்வரி மகனை மடியில் தூக்கி வைத்து கண் முழிச்சி பாரு. அம்மா வந்திருக்கேன். அம்மாவை விட்டு சென்று விட்டாயே என கண்ணீர் மல்க கதறி அழுதார். அவர்களுக்கு போலீசார் ஆறுதல் கூறி சிபிகேசவன் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணற்றின் கரையில் திரண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கூறுகையில், நாங்கள் இன்று காலையில் கல்லூரிக்கு வந்தபோது 2 சிறுவர்கள் ஓடி வந்து எங்களிடம் கிணற்றுக்குள் ஒருவர் விழுந்து விட்டார்.அவரை காப்பாற்றுங்கள் என கூறி விட்டு உடனே அங்கிருந்து ஓடி விட்டனர். நாங்கள் உடனே கிணற்றில் எட்டி பார்த்தோம். அங்கு சிறுவன் பிணமாக மிதந்தார். இது போல் சம்பவம் இனி நடக்காமல் இருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.

    ஏற்கனவே கிணற்றுக்குள் யாரேனும் தவறி விழுந்து விடக்கூடாது என கருதி கிணற்றின் மேற்பகுதியில் இரும்பு கிரிலால் மூடப்பட்டிருக்கிறது.

    இந்த கிரிலில் உள்ள இரும்பு கம்பிகளை யாரோ சிறிய அளவில் வளைத்து ஓட்டை போட்டு இருக்கிறார்கள். சுமார் 3 கம்பிகள் வளைக்கப்பட்டு ஓட்டை போடப்பட்டிருந்தது.

    இந்த இரும்பு கம்பிகளின் மேல் ஏறி மாணவர்கள் 3 பேரும் விளையாடினார்களா? இதில் எதிர்பாராத விதமாக கால் தவறி சிபிகேசவன் கம்பிகளின் இருந்த ஓட்டை வழியாக கிணற்றுக்குள் விழுந்தாரா? என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மாணவர்கள் 3 பேரும் இரும்பு கிரிலில் இருந்த ஓட்டை வழியாக தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயற்சி செய்திருக்கலாம். இதில் கால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சிபிகேசவன் எப்படி இறந்தார்? என்பதை கண்டறிய அவனுடன் விளையாடிய நண்பர்கள் 2 பேரை அழைத்து விசாரணை நடத்த அஸ்தம் பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் குடும்ப பிரச்சினை காரணமாக மாணவன் சிபிகேசவன் தந்தை முருகேசன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கடைசி மகனான சிபிகேசவனும் இறந்துள்ளது அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


    Next Story
    ×