search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க - விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி மறியல்
    X

    கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க - விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி மறியல்

    கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தி மக்களிடம் கோரிக்கை மனு பெற்றார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் சென்று மக்களிடம் குறைகள் கேட்டார். இதற்கு தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் கவர்னர் ஈடுபடக்கூடாது என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டித்திருந்தார். இனிமேல் மற்ற மாவட்டங்களில் கவர்னர் இதுபோல் ஆய்வு மேற்கொண்டால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. சார்பில் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    கடலூர் மாவட்டத்துக்கு ஆய்வு நடத்த வரும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    இதுபோல் கடலூர் மாவட்டத்தில் கவர்னர் ஆய்வு மேற்கொண்டால் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காட்டப்படும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கே கடலூர் பாரதி சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்துக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர்.

    அதேபோல் அங்கு விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன் உள்பட ஏராளமானோர் கூடினர்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் கடலூர் பாரதி சாலைக்கு வந்தனர். இவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். கைகளில் கருப்பு கொடி ஏந்திருந்தனர்.

    பின்னர் அவர்கள் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பாரதி சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பாரதி சாலையிலேயே கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தலைமை தபால் நிலையத்துக்கு செல்ல முயற்சி செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×