search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்
    X
    சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

    அயனாவரத்தில் ரெயில்வே குடியிருப்பில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

    அயனாவரத்தில் ரெயில்வே குடியிருப்பில் சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெரம்பூர்:

    அயனாவரம், ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் பனந்தோப்பு காலனி, ஐ.சி.எப். வடக்கு காலனி, ஐ.சி.எப். தெற்கு காலனி மற்றும் பி‌ஷப் லைன் குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    ரெயில்வே ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளுக்கு குறைந்த வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ரெயில்வே குடியிருப்பு வீடுகளை அதிக வாடகைக்கு விட்டு விட்டு பலர் வெளியிடத்தில் சொந்த வீடு கட்டி குடியிருப்பதாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது.

    மேலும் குடியிருப்புக்குள் டிராவல்ஸ் நிறுவனங்களின் வாகனங்கள் சட்ட விரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் வந்தது.

    இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் 20 கார்களில் 50-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெயில்வே குடியிருப்புக்குள் வந்தனர்.

    அவர்கள் தனிதனிக் குழுவாக பிரிந்து ஒவ்வொரு வீடாக சோதனை செய்தனர். வீட்டில் குடியிருப்பவர்கள் யார்? ரெயில்வே ஊழியர்களா? அல்லது வாடகைக்கு இருப்பவர்களா என்று ஆய்வு செய்தனர்.

    ரெயில்வே ஊழியர்களுக்கான ஆவணங்களையும் சோதனை செய்தனர். ஒவ்வொரு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் குறித்தும் விசாரித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த சோதனை குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரியவில்லை. தகவல் தெரிந்த பின்னர் அவர்கள் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோதனை முடிவில் ரெயில்வே குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு விட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த சோதனையால் ரெயில்வே குடியிருப்பில் பெரும் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×