search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் ‘ஒக்கி’ புயலில் பலியான மீனவர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி ஆறுதல்
    X

    குமரியில் ‘ஒக்கி’ புயலில் பலியான மீனவர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி ஆறுதல்

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது.

    புயலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள். பொருளிழப்பு, உயிரிழப்பை சந்தித்த விவசாயிகள் மற்றும் மீனவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல்காந்தி இன்று குமரி மாவட்டம் வருவதற்காக இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

    பகல் 11.40 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவர் அங்கிருந்து கார் மூலம் கேரள கடற்கரை கிராமங்களான விழிஞ்ஞம், பூத்துறை பகுதிக்கு சென்றார். அங்கு ஒக்கி புயலால் உயிரிழந்த கேரள மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் 1.05 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வந்தார். தூத்தூரில் உள்ள புனித யூதா ததேயூ கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்றார்.

    இப்பகுதியில் கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் புயலில் சிக்கி பலியான மீனவர் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் குமரி மாவட்ட விவசாயிகளையும், விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். அப்போது புயலில் சாய்ந்த மரங்கள், மழை நீரில் மூழ்கிய பயிர்கள், இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

    விவசாயிகளின் குறைகளையும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் பற்றியும் விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற குழு காங்கிரஸ் தலைவர் ராமசாமி, மாணிக் தாகூர், முகுல் வாஸ்னிக் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்நிகழ்ச்சி முடிந்ததும், ராகுல்காந்தி மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு மாநில காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ள  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு 8 மணிக்கு அவர், விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    குமரி மாவட்டத்திற்கு ராகுல்காந்தி வருவதை யொட்டி மேற்கு மாவட்டம் மற்றும் கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×