search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் சுட்டுக்கொலை: இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியே உயிருக்கு எமன் ஆனது
    X

    ராஜஸ்தானில் சுட்டுக்கொலை: இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியே உயிருக்கு எமன் ஆனது

    ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தினம், தினம் கையாண்டு வந்த துப்பாக்கியே அவருக்கு எமனாகிப் போனது.

    சென்னை:

    ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது காவல் துறையினரிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிப்பதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மிகவும் சாதுரியமாக செயல்படக் கூடியவர் என்று பெயரெடுத்தவர். அதோடு அவருக்கு இந்தி மொழியில் நன்றாக பேசவும் தெரியும். அதனால்தான் ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை உயர் போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

    47 வயதே ஆன பெரிய பாண்டியன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படித்து, சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையும் கனவும் அவருடன் இரண்டற கலந்திருந்தது. அந்த கனவு நனவானதால் அவர் காவல் துறை பணியை கண்ணாக மதித்து செய்து வந்தார்.

    எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குற்றவாளிகளிடம் மட்டும் கோபக்கனலாக மாறி விடுவார். அந்த சமயத்தில் பயம் என்பதே அவரிடம் வராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது அந்த இயல்பே அவருக்கு “எமன்” ஆகிப் போனது.

    அதுவும் அவர் தினம், தினம் கையாண்டு பயன்படுத்தி வந்த சொந்த துப்பாக்கியே எமனாகிப் போனது. அவரது கைத் துப்பாக்கியைப் பறித்தே கொள்ளையர்கள் அவரை சுட்டு வீழ்த்தி விட்டனர். இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:-

    சென்னையில் நகைக்கடையில் கொள்ளையடித்த ராஜஸ்தான் கும்பலில் நாதுராம், தினேஷ் சவுத்திரி இருவரும்தான் முக்கியமானவர்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன், முனிசேகர், ஏட்டுகள் குருமூர்த்தி, எம்பு ரோஸ், போலீஸ்காரர் சுதர்சன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் விரைந்தது. அங்கு பாலி மாவட்டம் ஜெய்புத்ரன் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார்கள்.

    உள்ளூர் போலீசாரிடம் முதலில் இது தொடர்பாக பேசிய தனிப்படை போலீசார், பிறகு தாங்களும் தனியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ராம் புரா எனும் கிராமத்தில் உள்ள பாழடைந்த செங்கல் சூளைக்குள் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த இடத்துக்கு செல்ல தனிப்படையினர் முடிவு செய்தனர்.

    அதன்படி ராம்புரா கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த அந்த செங்கல் சூளைக்கு சென்று கொள்ளைக் கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அந்த செங்கல் சூளையின் கட்டிடத்தில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளும் காலியாக இருந்தன. மூடப்பட்டிருந்த மூன்றாவது அறைக்குள்தான் கொள்ளையன் நாதுராம் பதுங்கி இருந்தான். அந்த அறைக்குள் நுழைந்த போலீசார் அவனை கைது செய்தனர்.

    அவனை வெளியில் அழைத்து வந்தபோது தான் தனிப்படை போலீசார் திடீர் எதிர் தாக்குதலை சந்தித்து தடுமாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாதுராமின் உறவினர்கள் சுமார் 10 பேர் போலீசாரை சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள். கற்களை அள்ளி வீசிய அவர்கள் கம்பு, கம்பிகளால் அடித்தனர்.

    கொள்ளையர்களுடன் அவர்களது உறவினர்கள் அதிகம் இருந்ததால் தனிப்படை போலீசாரால் அவர்களை சமாளிக்க இயலவில்லை. இதனால் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக போலீசார் பின்வாங்க வேண்டியதிருந்தது. நாதுராமை விட்டுவிட்டு போலீசார் அந்த இடத்தில் இருந்து வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    2 போலீசார் அருகில் இருந்த சுவரில் ஏறி குதித்து தப்பித்தனர். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மட்டும் கொள்ளையர்களின் உறவினர்களிடம் இந்தியில் பேசி சமரசம் செய்தார். ஆனால் அதை கண்டு கொள்ளாத கொள்ளையர்களின் உறவினர்கள் தொடர்ந்து தாக்கினார்கள்.

    இதனால் அவரும் பின் வாங்கினார். அப்போது கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவர் பயன்படுத்தும் கைத்துப்பாக்கி கீழே விழுந்தது. அதை எடுக்க இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் முயன்றார்.

    அதற்குள் கொள்ளைக் கும்பலில் ஒருவன் அந்த கைத்துப்பாக்கியை எடுத்து பெரியபாண்டியனை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டான். இதில் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்தார். அவர் மார்பை குண்டுகள் துளைத்ததால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

    மார்பில் குண்டு பாய்ந்ததும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சிறிது நேரம் துடிதுடித்துள்ளார். அவரை காப்பாற்றி விடலாம் என்று மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகரும், போலீசாரும் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    ஜெய்புத்ரன் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரை, பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    நேற்று அவரது உடல் அந்த மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு ஜெய்ப்பூர் கொண்டு வரப்பட்டது.

    இன்று காலை அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து விமானத்தில் புறப்பட்டது. மதியம் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.

    அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாலைப்புதூரில் நடக்கிறது.

    Next Story
    ×