search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் இரவில் மழை பெய்தபோது எடுத்த படம்.
    X
    நாகர்கோவிலில் இரவில் மழை பெய்தபோது எடுத்த படம்.

    குமரியில் கொட்டி தீர்த்த கனமழை - மயிலாடியில் 65 மி.மீ. பதிவு

    குமரியில் கொட்டி தீர்த்த கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழையின் காரணமாக சுசீந்திரம் பழையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி ஒக்கி புயல் தாக்கியது. அப்போது கொட்டி தீர்த்த கனமழையினால் பாசன குளங்கள் நிரம்பியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    சூறைக்காற்றிற்கு மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்று 15 நாட்களாகியும் இன்னும் ஒருசில இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று மாலையிலும் பெய்த கனமழை பொதுமக்களை பரிதவிப்பிற்கு ஆளாக்கியது.

    மயிலாடி, சாமித்தோப்பு, கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை 3.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 65 மி.மீ. மழை பதிவானது. தொடர்ந்து கொட்டிய மழையினால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

    நாகர்கோவிலில் மாலை 5.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் பெய்தது. இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. மகளிர் கிறிஸ்தவ சாலை, செம்மாங்குடி ரோடு, கோட்டார் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. மழை நீரில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்தது. அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கேற்ப அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று காலை 397 கனஅடியும், சிற்றாறு-1 அணையில் இருந்து 136 கனஅடி உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழையின் காரணமாக சுசீந்திரம் பழையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது.

    தோவாளை பகுதியில் பெய்த கனமழையினால் தோவாளை அரசு பள்ளி முன்பு உள்ள கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் பள்ளியின் காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.35 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.85 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-8.6, பெருஞ்சாணி-18.8., நாகர்கோவில்-33, பூதப்பாண்டி-10, சுருளோடு-18.6, கன்னிமார்-16.4, தக்கலை-15.3, ஆரல்வாய்மொழி-17, மயிலாடி-65, கொட்டாரம்-39.2, நிலப்பாறை-22, ஆணைக்கிடங்கு-15, அடையாமடை-47, கோழிப்போர் விளை-37.



    Next Story
    ×