search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல் தாக்குதலுக்கு பிறகு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் மீனவர்கள்
    X

    ஒக்கி புயல் தாக்குதலுக்கு பிறகு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராகும் குளச்சல் மீனவர்கள்

    ஒக்கி புயல் தாக்குதலுக்கு பிறகு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக குளச்சல் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். அதற்காக வலைகளை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்குதல் காரணமாக மீனவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். ஏராளமான மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    புயல் காரணமாக கடந்த 30-ந் தேதி முதல் குமரி மாவட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கச் செல்லவில்லை. குளச்சல் மற்றும் கேரளாவை தங்கு தளமாகக் கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்தொழில் செய்து வந்தனர்.

    இவர்கள் கடந்த 13 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    புயல் தாக்குதலின் போது ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக சில படகுகளும், அலை தடுப்புச்சுவரில் மோதி சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது கடலில் இயல்புநிலை திரும்பியுள்ளதை தொடர்ந்து குளச்சல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக நேற்று விசைப்படகு சங்கத்தின் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இந்த கூட்டத்தில் 2 தினங்களில் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி குளச்சல் மீனவர்கள் அதற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று தொடங்கினார்கள்.

    குளச்சல் துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் மீனவர்கள் தங்கள் வலைகளை தயார் செய்து வருகிறார்கள். சேதம் அடைந்த மீன் பிடி வலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல விசைப்படகுகளில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீனை பதப்படுத்தும் ஐஸ்கட்டிகளும் ஏற்றப்பட்டு வருகிறது.

    குடிநீர், உணவுப் பொருட்கள், டீசல் போன்றவற்றை தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் வலையில் விலையுயர்ந்த மீன்கள் கிடைக்கும். மீனவர்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும். ஆனால் ஒக்கி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை உருவானதால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    மீண்டும் மீன் பிடி தொடங்க உள்ளதன் மூலம் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்லலாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இரவு 10 மணி அளவில் அவர்களது வள்ளங்களும், கட்டுமரங்களும் கரை திரும்பின. அந்த மீனவர்கள் வலையில் அதிகளவில் கொழிசாளை மீன்கள் கிடைத்திருந்தன. 


    குளச்சல் மீன் ஏலக்கூடத்தில் வலைகளை தயார் செய்யும் மீனவர்கள்.

    Next Story
    ×