search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் தேர்வில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் தேர்வில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

    பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. துணைவேந்தர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மூன்றாம் கட்டப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பேரில் பெரும்பாலானோர் குற்றச்சாற்றுக்கு உள்ளானவர்கள் ஆவர். இதை நன்றாக அறிந்திருந்தும் ஊழல்வாதிகளை அப்பதவிக்கு தேர்வு செய்ய தேர்வுக்குழு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 40 பேர் இரண்டாம் கட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். மூன்றாவது கட்டமாக 40 பேரிலிருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பாஸ்கரன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீனா, பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர்கள் சேது குணசேகரன், அங்க முத்து, பேராசிரியர்கள் குழந்தைவேல், ராஜேந்திரன், பார்த்த சாரதி, வேல்முருகன், ஜெயவேல், வெங்கடாசலம் ஆகியோர் தான் அப்பட்டியலில் இருப்பவர்கள் ஆவர்.

    பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மீனா, பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்க முத்து ஆகிய இருவரில் ஒருவரை துணை வேந்தராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கேற்ற வகையில் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பதவியில் இருந்த காலத்தில் தான் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் பெரும் சீரழிவைச் சந்தித்தன.

    பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் துணை வேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பதவிக்கு 241 பேர் விண்ணப்பித்த நிலையில் இரண்டாம் கட்டத்திற்கு 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பட்டியலில் ஊழல்வாதிகள் பலர் இடம் பெற்றிருந்தனர். அவர்களை நீக்க வேண்டும் என கடந்த 6-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன். அதேபோல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டியலில் ஊழல்வாதிகள் நீக்கப்பட்டு தகுதியுள்ளவர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இது பாராட்டத்தக்கது. ஆனால், அதற்கு முற்றிலும் எதிராக பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது.

    துணைவேந்தர் நேர்மையானவராக இருக்க வேண்டுமென்றால், அப்பதவிக்கான தேர்வு வெளிப்படையாக நடைபெற வேண்டும். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான இறுதிக்கட்ட ஆய்வுக்காக 10 பேர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய வெளிப்படைத்தன்மை என்பது பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் இல்லை.

    துணைவேந்தரை தேர்வு செய்வதில் ஸ்ரீதர் தலைமையிலான தேர்வுக்குழு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. எனவே, துணைவேந்தர் தேர்வுக்குழுவை கலைத்து விட்டு, அப்பழுக்கற்ற கல்வியாளர்களைக் கொண்ட புதிய தேர்வுக்குழுவை அமைத்து துணைவேந்தர் நியமனத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×