search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி மாவட்டம் வருகை
    X

    ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி மாவட்டம் வருகை

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நாளை குமரி வருகை தருகிறார்.

    நாகர்கோவில்:

    ஒக்கி புயல் தாக்கியதில் குமரி மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. விவசாய பயிர்களான நெல், வாழை, தென்னை, ரப்பர் மரங்கள் பல ஆயிரம் ஏக்கரில் சேதம் அடைந்துள்ளது.


    மேலும் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் உடைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது போல மாறி விட்டது. கடலோர கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்களும் மாயமாகி விட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்து உள்ளது.

    மாவட்டத்தில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்கு பொதுமக்கள் திரும்ப பல நாட்கள் ஆகும் சூழ்நிலையே உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்வையிட்டு பொது மக்களுக்கும், விவசாயிகள், மீனவர்களுக்கும் ஆறுதல் கூற தலைவர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து பயிர் சேதங்களை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமும் ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.

    ஏற்கனவே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், தங்கமணி ஆகியோரும் குமரி மாவட்ட பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை விரைவுபடுத்தினார்கள்.

    எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குமரி மாவட்ட மக்களின் சோகத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் குமரி மாவட்டத்திற்கு நாளை (14-ந்தேதி) வருகை தருகிறார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் ராகுல்காந்தி நாளை காலை 11 மணிக்கு குமரி மாவட்டம் தூத்தூரில் உள்ள யூதா கல்லூரியை வந்தடைகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு செல்லும் ராகுல் காந்தி அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் புயலால் நெற்பயிர்களையும், ரப்பர், வாழை, தென்னை உள்பட பயிர்களை இழந்த விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளையும் அவர்களது கோரிக்கைகளையும் ராகுல் காந்தி கேட்டறிகிறார். அதன் பிறகு மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். முன்னதாக அவர் திருவனந்தபுரம் பகுதியிலும் புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

    இந்த தகவலை கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×