search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே மலட்டாற்றில் கிராம மக்கள் சொந்த செலவில் கட்டி வரும் தடுப்பணை
    X

    விழுப்புரம் அருகே மலட்டாற்றில் கிராம மக்கள் சொந்த செலவில் கட்டி வரும் தடுப்பணை

    விழுப்புரம் அருகே மலட்டாற்றில் கிராம மக்கள் சொந்த செலவில் கட்டி வரும் தடுப்பணையை புதுவை சபாநாயகர் பார்வையிட்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து பிரியும் மலட்டாற்றுக்கு வரும் தண்ணீரை நம்பி தளவானூர், திருப்பாச்சனூர் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. மேலும் புதுவை மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஆனால் தென்பெண்ணையாற்றில் இருந்து மலட்டாறுக்கு தண்ணீர் செல்லும் கிளை வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மலட்டாற்றுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் தென்பெண்ணையாற்று தண்ணீர் வீணாக கடலூரில் உள்ள கடலுக்கு சென்று கலந்தது. எனவே ஆற்று தண்ணீர் கடலில் சென்று கலப்பதை தடுத்து தண்ணீரை சேமிக்கும் விதமாக மலட்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

    அரசை எதிர்பார்க்காமல் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகளும் களமிறங்கி தங்களது சொந்த செலவில் தடுப்பணை கட்ட முடிவு செய்தனர். விழுப்புரம் அருகே தளவானூர் பகுதியில் உள்ள மலட்டாற்றின் குறுக்கே மரக்கிளைகள், களிமண்ணை கொண்டு சுமார் 720 மீட்டர் நீளத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் தற்காலிகமாக தடுப்பணை கட்டி வருகின்றனர். இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் தளவானூர் கிராமத்துக்கு வந்து அங்கு கிராம மக்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து கட்டி வரும் தடுப்பணை பணிகளையும், தூர்வாரப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் செல்வதையும் பார்வையிட்டார்.

    கிராம மக்கள், விவசாயிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த சபாநாயகர் வைத்திலிங்கம், அவர்களை ஊக்கப்படுத்தினார். தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் இந்த பணிகளை பாதியிலேயே நிறுத்தாமல் தொடர்ந்து செய்து தடுப்பணையை கட்டி முடிக்குமாறு அறிவுறுத்தினார். தனிப்பட்ட முறையில் தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும், புதுவை அரசிடமும் பேசி உதவி செய்வதாகவும் கூறினார்.

    தமிழக எல்லைப்பகுதியில் கிராம மக்கள் கட்டி வரும் தடுப்பணை பணியை விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகள், ஆளும்கட்சி பிரதிநிதிகள் யாரும் நேரில் வந்து பார்வையிடாத நிலையில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி மாநில சபாநாயகர் அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டு சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×